தமிழக குழுவும், பிரதமரை சந்திக்கலாமே !


தமிழக குழுவும், பிரதமரை சந்திக்கலாமே !
x
தினத்தந்தி 20 Sep 2020 9:30 PM GMT (Updated: 20 Sep 2020 6:56 PM GMT)

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் பிரச்சினை காலம் காலமாக இருந்துவருகிறது.

மேட்டூர் அணை நிரம்பினால்தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் நிரம்பும். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு, காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வைத்துத்தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது, நடைபெறவும் முடியும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் பிரச்சினை காலம் காலமாக இருந்துவருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடகம் அங்கு கனமழை பெய்து, அவர்களது அணைகளில் நீரை தேக்கி வைக்க முடியாதநிலை ஏற்படும்போது மட்டுமே, ஒரு வடிகாலாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கையாக இருக்கிறது.

கர்நாடக அரசு 2017-ம் ஆண்டு ராமநகர் மாவட்டம், கனகபுரா மலைப்பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டது. மேகதாது அணையை கட்டினால் நிச்சயம் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வராது என்பதால் தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புகளை தெரிவித்துவந்தது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பின்பு மத்திய நீர்வள அமைச்சகம் இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒப்புதல் கொடுத்தது. ஆனால் இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த ஒப்புதலை வழங்க வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பிரதமரை 3 நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசு எப்படியும் இந்த அணையை கட்டிவிட வேண்டும் என்பதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஒரு தூதுக்குழு சென்று பிரதமரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில், பேரவை விதி எண் 110-ன்கீழ் இந்த பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நமக்கு வழங்கப்படவேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக, அவர்கள் எந்தவகையிலும் மேகதாது அணையை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. சுப்ரீம் கோர்ட்டு நமக்கு சாதகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதன்பிறகு, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசும்போது, “மேகதாது அணையை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கர்நாடக முதல்-மந்திரி தலைமையில் தூதுக்குழு செல்ல திட்டமிட்டதுபோல, தமிழ்நாட்டிலும் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்து தலைவர்களும் ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது மத்தியில் இருப்பதும் பா.ஜ.க. ஆட்சி தான். கர்நாடக மாநிலத்தில் இருப்பதும் பா.ஜ.க. ஆட்சிதான். எனவே, அரசு மிகுந்த கவனம் செலுத்தி சிந்தித்து, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

என்னதான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இருந்தாலும், கர்நாடக அரசு அதன்படி பல நேரங்களில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பதால், தமிழக அரசு அமைதியாக இருந்துவிடக்கூடாது. கர்நாடக முதல்-மந்திரி தலைமையில் தூதுக்குழு பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதுபோல, தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு தூதுக்குழு அதற்கு முன்பே பிரதமரை சந்தித்து மேகதாது அணையை கட்டக்கூடாது என்று வற்புறுத்த வேண்டும். அதுவரையில் காத்திருக்காமல், தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடக்கிற சூழ்நிலையில், டெல்லியில் உள்ள நமது எம்.பி.க்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக இணைந்து பிரதமரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கையை முறையிட வேண்டும். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பிரச்சினையை கிளப்பி, நமக்கு சாதகமான பதிலை மத்திய அரசிடமிருந்து பெறவேண்டும் என்பதுதான் விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையாகும்.

Next Story