தமிழக மக்களுக்கு பிரதமர் தந்த உறுதி!


தமிழக மக்களுக்கு பிரதமர் தந்த உறுதி!
x
தினத்தந்தி 23 Sep 2020 9:30 PM GMT (Updated: 23 Sep 2020 6:01 PM GMT)

காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிட வேண்டும். இதற்கிடையே, காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தமிழக அரசு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் காவிரிக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வராது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒப்புதல் கொடுக்காத நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்கக்கோரி, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த வாரம் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். முதல்-மந்திரி தலைமையில் ஒரு குழுவும் கர்நாடகத்தில் இருந்து பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக குழுவும் பிரதமரை சந்திக்கலாமே! என்ற தலைப்பில் கடந்த திங்கட்கிழமை வெளிவந்த ‘தினத்தந்தி’ தலையங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலும் ஒரு தூதுக்குழு பிரதமரை சந்தித்து வற்புறுத்த வேண்டும். டெல்லியில் உள்ள தமிழக எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதிமாறன் ஆகியோரிடம் பிரதமருக்கு, தான் எழுதிய கடிதத்தை கொடுத்து சந்திக்க வலியுறுத்தி இருந்தார். அந்த கடிதத்தில், மு.க.ஸ்டாலின் மேகதாது அணைத்திட்டம் 5.2.2007 அன்று காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், மேகதாது அணைத்திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுக்கு எதிரானது என்பதால், அதை ஏற்கமுடியாது என நிராகரித்து, தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

தற்போது இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. ஆகவே, மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமான பணிக்கோ கர்நாடக முதல்-மந்திரி கோரியபடி ஒப்புதல் வழங்கக்கூடாது என சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு தி.மு.க. சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். பிரதமரிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய தி.மு.க. எம்.பி.க்கள், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் என்ன கூறுவது? என்று கேட்டபோது பிரதமர், “தமிழ்நாட்டுக்கு நான் எந்த அநீதியும் இழைக்கமாட்டேன்” என்று கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த உடனடி நடவடிக்கையும், தி.மு.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் அளித்த உறுதிமொழியும், தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒரு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, அதுதொடர்பாக மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, கர்நாடக அரசு என்றாலும் சரி, எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கமுடியாது. அது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த துருப்பு சீட்டை வைத்தே தமிழக அரசும் மற்றும் அரசியல் கட்சிகளும் குறிப்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர்களும், கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டக்கூடாது என்ற கோரிக்கையை பிரதமரிடமும், மத்திய அமைச்சகங்களிடமும் வற்புறுத்த வேண்டும். இந்த முயற்சி ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். தி.மு.க. போல, எல்லோரும் இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story