பொருளாதாரத்தை மீட்டெடுக்க பரிந்துரைகள்!


பொருளாதாரத்தை மீட்டெடுக்க பரிந்துரைகள்!
x
தினத்தந்தி 24 Sep 2020 9:30 PM GMT (Updated: 24 Sep 2020 5:56 PM GMT)

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் வேகத்தால் மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

பல்வேறு துறைகளில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த, இடைக்கால, உடனடி பாதிப்புகள், இதை சமாளிக்க முக்கியமான துறைகளில் என்னென்ன குறுகியகால, நடுத்தரகால நடவடிக்கைகளை எடுக்கலாம்?, என்னென்ன அச்சுறுத்தல்கள் இருக்கின்றன?, அதிலிருந்து மீள்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?, மாநில அரசின் துணையோடு என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்?, முக்கியத்துறைகளில் எப்படி வளர்ச்சியை காணலாம்?, மாநிலத்தின் நிதிநிலையில் என்னென்ன பாதிப்பு இருக்கிறது?, அதை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்?, என்னென்ன செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்? என்பனவற்றை எல்லாம் ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்காக, கடந்த மே 9-ந்தேதி தமிழக அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைத்தது.

இந்த குழுவுக்கு சிறந்த பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராக இருந்தவருமான சி.ரங்கராஜன் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான எஸ்.கிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைமைச் செயலாளர் என்.நாராயணன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன், டி.வி.எஸ். குரூப் தலைவர் வேணுசீனிவாசன், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு உள்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள், மூத்த அதிகாரிகள் என்று மொத்தம் 24 பேர் கொண்ட குழுவாக இருந்தது.

இந்தக்குழு தொழில் அதிபர்கள், வர்த்தக சங்கங்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள நிபுணர்களோடு கலந்தாலோசித்து, 250 பக்கங்களில் ஒரு அறிக்கையை கடந்த திங்கட்கிழமை அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தது. மிகக்குறுகிய காலத்தில் முழுமையாக ஆராய்ந்து, பொருளாதார இருட்டிலிருந்து வெளிச்சத்தின் பாதையை காட்டும்வகையில் இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது, நிச்சயமாக பாராட்டுக்குரியதாகும். கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று அழைக்கப்படும், 100 நாள் வேலைத்திட்டம் எவ்வாறு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறதோ, அதுபோல நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புக்கான ஒரு திட்டத்தை நிறைவேற்றி, குறைந்தபட்சம் ஆண்டுக்கு 75 நாட்களாவது வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று கூறியிருப்பது நிச்சயமாக நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அளிக்கும். ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டும். ஏனெனில், பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதித்துவிட்டது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க வேறுவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு விரைவாக ஊரடங்கிலிருந்து வெளிவருகிறோமோ, அவ்வளவு விரைவாக மாநிலத்தின் பொருளாதாரம் வளரும் என்பது இந்தக்குழுவின் கருத்து. தற்போது ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தை, நவம்பருக்கு மேலும் நீட்டிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் நலநிதியில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ரூ.3,200 கோடியை, பொருளாதார வளர்ச்சிக்காக செலவழிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்திற்கு ரூ.1,000 கோடி வழங்க வேண்டும்.

பட்ஜெட்டில் ஒதுக்கியதுபோக, கூடுதலாக மூலதன செலவுகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கவேண்டும். இந்த கூடுதல் தொகையை அரசாங்கம் கட்டுமான பணிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவழிக்க வேண்டும். இதுபோன்ற பல பரிந்துரைகளை கூறிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் அடுத்த 2 மாதங்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தையகாலத்தில் இருந்த அளவுக்கு வந்துவிடும் என்று கூறியது, மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக சி.ரங்கராஜன் குழு தாக்கல் செய்துள்ள 250 பக்க அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதோ, அவற்றையெல்லாம் அனைத்துத்துறை செயலாளர்களையும் ஆய்வு செய்யச்சொல்லி, உடனடியாக நிறைவேற்றி, தமிழகத்தை பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக ஒருசில மாதங்களில் மாற்றி அமைக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்த அறிக்கை, “பாதை தெரியுது பார்” என்பதை காட்டிவிட்டது.

Next Story