பரிசோதனை கட்டணத்தில் பாதி வேண்டும் !


பரிசோதனை கட்டணத்தில் பாதி வேண்டும் !
x
தினத்தந்தி 25 Sep 2020 9:30 PM GMT (Updated: 25 Sep 2020 6:13 PM GMT)

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் அடியெடுத்து வைத்த கொரோனா என்னும் கொடிய தொற்று, மாதங்கள் உருண்டோடிய நிலையிலும், இந்தியாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தீ, அக்டோபர் மாதத்தில் உச்சநிலையை அடையக்கூடும் என்ற மருத்துவ வல்லுநர்களின் அபாயச் சங்கும் பயத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பரிந்துரைகளை அளிக்கும்படி, தமிழக அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அந்த குழுகூட, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசாங்கம் இதுவரை ரூ.511 கோடியே 64 லட்சம் தான் அவசரகால மீட்பு மற்றும் சுகாதார திட்டங்கள் தயார் நிலைக்கான தொகுப்பு நிதியில் இருந்து வழங்கியிருக்கிறது.

இந்தநிலையில், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 65.5 சதவீதமும், மொத்த உயிரிழப்புகளில் 77 சதவீதமும் ஏற்பட்ட மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்-மந்திரிகளோடு கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, கொரோனா பாதிப்புகளை எந்த வகையில் குறைக்கலாம்? என்று ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டில் உள்ள பிறமாநிலங்களுக்கும், தமிழ்நாடு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நோய் அறிகுறிகளை கண்டறிவதிலும், கொரோனா நோய் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதிலும், பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழ்நாடு பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது“ என்று கூறி பாராட்டு மழை பொழிந்தார்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டிய அளவில் மகிழ்ச்சி தான். ஆனால், அதிக கொரோனா பாதிப்புள்ள 7 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிகளில் மத்திய அரசாங்கமும் தன் பங்களிப்பை நிதியுதவிகள் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கும்போது, நாட்டிலேயே மிக அதிகமான அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கொரோனா பரிசோதனை தமிழ்நாட்டில் தான் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 85 ஆயிரம் பேர்களை பரிசோதனை செய்யும் திறன் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த பரிசோதனைகளுக்கே தினமும் ரூ.6 கோடியே 80 லட்சம் தமிழக அரசுக்கு செலவாகிறது. இவ்வளவு பரிசோதனைகளையும் செய்து உரிய சிகிச்சைகளை அளித்து வருவதால் தான் இறப்பு 1.62 சதவீதமாக நாட்டிலேயே மிக குறைவான அளவில் இருக்கிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் 90 சதவீதமாக நாட்டிலேயே மிக அதிக அளவில் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு தினமும் பரிசோதனைக்காக ஆகும் செலவில், 50 சதவீத தொகையை ‘பி.எம். கேர்ஸ்‘, அதாவது பிரதம மந்திரியின் மக்கள் உதவி மற்றும் அவசர சூழ்நிலைகளின் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கடுமையான நிதிச் சிக்கலில் தமிழ்நாடு தத்தளிக்கிறது. மாநில பேரிடர் நடவடிக்கை மற்றும் தணிப்பு நிதி முழுவதுமாக செலவாகிவிட்டது. இப்படி எல்லா நிதிகளையும் செலவழித்து கஜானாவே வற்றிப்போய்விட்ட சூழ்நிலையில், தமிழக அரசுக்கு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் கூடுதல் நிதி அளிக்க வேண்டும். எப்படி மனம் திறந்து பாராட்டினீர்களோ? அதைப்போல மத்திய கஜானாவை திறந்தும் தாராளமாக தமிழ்நாட்டிற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே பிரதமருக்கு, தமிழக மக்கள் விடுக்கும் கோரிக்கையாகும்.

Next Story