கொரோனா பாதிப்பில் இருந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு


கொரோனா பாதிப்பில் இருந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 28 Sep 2020 9:30 PM GMT (Updated: 2020-09-28T23:18:23+05:30)

ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிது, புதிதாக தலையெடுத்து கொண்டிருக்கிறது.

கொரோனா எந்த பேதமும் இல்லாமல் எல்லோரையும் தன் கோர கரங்களால் சீண்டி கொண்டிருக்கிறது. பல மத்திய மந்திரிகள் பாதிக்கப்பட்டு விட்டனர். தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய மந்திரி உயிரிழப்பு கூட ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ் முதல் முறையாக சென்னைக்கு கடந்த 24-ந்தேதி வந்தார். விமானநிலையத்திலும், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திலும் காங்கிரசார் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அவர், கட்சி தலைவர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். அடுத்த நாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். தனது சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூரு சென்ற நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து பாதுகாப்புடன் இருக்குமாறு அவர் கூறி இருக்கிறார். கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இந்த நேரத்தில், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லோருமே மிகப்பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

யாரிடம் இருந்து யாருக்கு தொற்று வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் இப்போது எல்லாம் அறிகுறி இல்லாமலேயே 80 சதவீத பேருக்கு தொற்று இருக்கிறது.

‘விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு’ என்பதை எல்லோரும் தாரக மந்திரமாக கொள்ளவேண்டிய இந்த நேரத்தில் தலைவர்கள் அதை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். இப்போது கூட்டங்களில் நேரில் கலந்துகொண்டுதான் தங்களது கருத்துகளை சொல்ல முடியும், கருத்துகளை பெற முடியும் என்ற நிலை இல்லை. தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் காணொலி காட்சி மூலம் எல்லா கூட்டங்களையும் நடத்த முடியும். தனியார் நிறுவனங்களில் அதிபர்கள், நிர்வாகிகள் அலுவல் ரீதியான கூட்டங்கள் தினமும் காணொலி காட்சி மூலமே நடத்தப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் சந்திப்புகூட காணொலி காட்சி மூலம் நடக்கின்றன. பிரதமரும் சரி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சரி, தலைமை செயலாளரும் சரி, அன்றாட அலுவல் கூட்டங்களை காணொலி காட்சி வாயிலாக நடத்திவருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவை காணொலி காட்சி மூலமே நடத்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் தேர்ந்தெடுத்து சாதனை படைத்தார்.

நேற்று முன்தினம் கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி வாயிலாக நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழா கூட்டத்தில் 530-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இப்படி காணொலி காட்சி மூலம் எல்லாவற்றையுமே நடத்தக்கூடிய அளவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் அரசும் சரி, அரசியல் கட்சிகளும் சரி, கொரோனா பாதிப்பு முடிவடையும் வரையில் மக்களை நேரடியாக சந்திப்பதையோ, மக்கள் கூட்டம் சேரும் வகையில் கூட்டங்கள் நடத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது. கொரோனா தொற்றுள்ள ஒருவரால் பலருக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதால் எல்லோருடைய உயிரும் விலை மதிப்பற்றது என்ற வகையில் கொரோனா குறையும் வரையில் பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Next Story