பாராட்டுகளும், கோரிக்கைகளும் கலந்த தீர்மானங்கள்!


பாராட்டுகளும், கோரிக்கைகளும் கலந்த தீர்மானங்கள்!
x
தினத்தந்தி 29 Sep 2020 8:59 PM GMT (Updated: 29 Sep 2020 8:59 PM GMT)

அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அரசியல் ரீதியாக மிகப்பரபரப்பாக நடந்த கூட்டம் இது. எல்லோருமே அந்த கோணத்தில் இந்த செயற்குழுவின் முடிவுகளை எதிர்பார்த்தாலும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களும் வெகுவாக வரவேற்கத்தக்க தீர்மானங்களாகும்.

அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அரசியல் ரீதியாக மிகப்பரபரப்பாக நடந்த கூட்டம் இது. எல்லோருமே அந்த கோணத்தில் இந்த செயற்குழுவின் முடிவுகளை எதிர்பார்த்தாலும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களும் வெகுவாக வரவேற்கத்தக்க தீர்மானங்களாகும். கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு மழலை பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது, அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்துசுட்ட தோசை என்பார்கள். அதுபோல, பாராட்டுகளையும், மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கைகளையும் விடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவை. கொரோனா பாதிப்பு இப்போதைக்கு குறைந்துவிடப்போவதில்லை. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில்தான் முதல் தடுப்பூசி வெளியேவரும் என்று கூறியிருக்கிறார். தடுப்பூசி வந்து எல்லோருக்கும் போட்டு, அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த பிறகுதான் கொரோனாவை முழுமையாக ஒழிக்கமுடியும். அந்தவகையில், கொரோனா பாதிப்பை தடுக்கவும், நிவாரணத்துக்கும் தமிழக அரசுக்கு நிறைய செலவாகும். இதையெல்லாம் தமிழக அரசின் நிதிநிலையை கருத்தில்கொண்டால், நிச்சயமாக முழுசெலவையும் தமிழக அரசால் ஏற்கமுடியாது. எனவே, கொரோனா பரவலை தடுக்கவும், நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், போதுமான நிதியை தமிழக அரசுக்கு, மத்திய அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிச்சயமாக தேவையான ஒன்று.

கொரோனா ஒழிப்புக்கு அரசுக்கு நிதி ஒதுக்கவேண்டிய அதேநேரத்தில், ஏற்கனவே தமிழக அரசுக்கு, மத்திய அரசாங்கம் தரவேண்டிய நிறையத்தொகை இன்னும் தரப்படாமல் இருக்கிறது. சரக்கு சேவைவரி வகையில் ரூ.4,073 கோடியும், திட்டங்கள் சார்ந்து அளிக்கப்படவேண்டிய நிதி வகையில் ரூ.16,505 கோடியே 32 லட்சமும், மானியங்கள் வகையில் ரூ.3,185 கோடியே 4 லட்சமும், ஆக மொத்தம் ரூ.23,763 கோடியே 36 லட்சத்தை விரைந்து வழங்கி, தமிழக அரசின் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்கிட தோள்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை செயற்குழு வலியுறுத்தி மற்றொரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மொழிக்கொள்கையில் எந்த மொழிக்கும் அ.தி.மு.க. எதிரானது அல்ல. எந்த மொழியும் எங்கள் மீது திணிக்கப்படுவதை எங்களால் ஏற்க இயலாது என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறது என்ற தீர்மானமும் நிச்சயமாக பாராட்டுக்குரியது. ‘நீட்’ தேர்வில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றொரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வையும், நீதியையும் நிலைநாட்டுமாறும், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்கள் மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து விழிப்புடன் கண்காணிக்குமாறு மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபோல, அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்களை எல்லாம் அரசு கருத்தில் எடுத்துக்கொண்டு, கட்சி ரீதியாக பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது. இனி அதை செயல்படுத்துவது அரசின் பொறுப்புதான் என்றவகையில், ஒவ்வொரு தீர்மானத்தையும் சம்பந்தப்பட்ட துறைகள், அமைச்சர்கள் மிகத்தீவிரமாக தொடர் நடவடிக்கை எடுத்து, நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெறவேண்டிய நிலுவைத்தொகையை வலியுறுத்தி பெற்றால், நிச்சயமாக கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும். பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந்தேதி இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் காணொலி மூலம் பேசும்போது, தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் சட்டம் கூறியுள்ளபடி, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச இலங்கை தயாராக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை பயன்படுத்திக்கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்தத்தில், தீர்மானங்கள் பாராட்டுக்குரியது என்றாலும், அதை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதில்தான் முழு வெற்றியும் இருக்கிறது.

Next Story