“ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு”


“ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு”
x
தினத்தந்தி 30 Sep 2020 8:38 PM GMT (Updated: 2020-10-01T02:08:06+05:30)

தமிழ்நாட்டில் “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி, “ஒரே நாடு-ஒரே வரி, ஒரே நாடு-ஒரே தேர்வு” என்று அமல்படுத்திக்கொண்டிருக்கும் வரிசையில், “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி, “ஒரே நாடு-ஒரே வரி, ஒரே நாடு-ஒரே தேர்வு” என்று அமல்படுத்திக்கொண்டிருக்கும் வரிசையில், “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்தப்பகுதியில் உள்ளவர்களும், எங்கு சென்றாலும் தங்கள் ரேஷன் கார்டுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இதுவரையில் அவரவர் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ரேஷன் கார்டில் எந்த கடையில் அவர்கள் பொருட்கள் வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பல நேரம் அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் இடமாறுதலாகி வேறு ஊர்களுக்கு செல்லும்போதோ, அல்லது ஒரே ஊரில் வீடுகளை மாற்றும் நிலையில் உள்ளவர்களோ, தங்கள் முகவரிகளை ரேஷன் கார்டில் மாற்றி வாங்குவதற்கு பெரும் சிரமப்பட்டார்கள். இதுமட்டுமல்லாமல், உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயரும் தொழிலாளர்கள் அதாவது, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பை தேடிச்செல்பவர்கள் ரேஷன் கார்டுகள் மூலமாக பொருட்கள் பெறமுடியாமல், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

ஏற்கனவே போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரேஷன் கார்டுகள், ஆதார் எண்களோடு இணைக்கப்பட்டு “ஸ்மார்ட்” கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்திற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனை எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்த கருவியில் ‘பயோமெட்ரிக்’ எனப்படும் கைரேகை கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்று முதல் ரேஷன் கார்டுகளில் பொருள் பெற வேண்டுமென்றால், ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரோ அல்லது குடும்ப உறுப்பினரோ நேரில் சென்று விரல் ரேகையை பதிவு செய்த பிறகே உணவுப்பொருட்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 34,773 நியாய விலைக் கடைகள் மூலம், 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் தமிழக அரசு வழங்கும் சலுகைகளின் அடிப்படையில் பொருட்களை பெறமுடியும். மற்ற மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் எல்லா கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியும் என்ற வகையில், நிச்சயமாக இது வரவேற்புக்குரியது. ஆனால், குடும்பத்தலைவரோ, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று விரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்களை வாங்க முடியும் என்பது ஏராளமான குடும்பங்களுக்கு சாத்தியமில்லாததாகும். பல குடும்பங்களில் கணவன்-மனைவி வேலைக்கு செல்பவர்களாக இருந்து, பிள்ளைகளும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்களாக இருந்தாலோ, கணவன்-மனைவி முதியோராக இருந்தாலோ, மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலோ, அவர்களால் நிச்சயம் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியாது. அவர்கள் எல்லாம் பொதுவாக வீட்டில் வேலை பார்ப்பவர்களிடமோ, பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ இதுவரை ரேஷன் கார்டை கொடுத்து அனுப்பி வாங்கி வந்தார்கள். மேலும் இப்போது கொரோனா நேரத்தில் முதியோர்களும், நீரிழிவு நோய் போன்ற இணை நோய் உள்ளவர்களும், வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது என்று அறிவுரை கூறும்நேரத்தில், அவர்கள் எல்லாம் ரேஷன் கடைக்கு நேரில் வந்து விரல் ரேகையை பதித்தால் தான் பொருட்கள் என்றால், கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சமும் இருக்கிறது. ஆக, இந்த புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாத இத்தகையவர்களுக்கு அவர்கள் கடிதம் கொடுத்து அனுப்பினால் பொருட்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசாங்கத்துக்கும் இதை எடுத்துச்சொல்லவேண்டும்.

Next Story