தளர்வுகளும் தேவை; கவனமும் தேவை!


தளர்வுகளும் தேவை; கவனமும் தேவை!
x
தினத்தந்தி 1 Oct 2020 8:36 PM GMT (Updated: 1 Oct 2020 8:36 PM GMT)

இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், இன்னமும் ஒரு தொடர்கதைபோல் நீண்டுகொண்டேபோகிறது. இந்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்து, நாட்டின் பொருளாதாரமும் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், இன்னமும் ஒரு தொடர்கதைபோல் நீண்டுகொண்டேபோகிறது. இந்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்து, நாட்டின் பொருளாதாரமும் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கொரோனா... கொரோனா... என்று கூறிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது. ஒருபக்கம் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிகளை எடுத்துக்கொண்டு, அடுத்தபக்கம் சகஜவாழ்க்கைக்கும் திரும்பி ஆகவேண்டும். அதனால்தான் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்து, 190 நாட்களை கடந்து 9-வது முறையாக பல தளர்வுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், 5-வது ஊரடங்கு தளர்வு என்று நேற்று முன்தினம் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சினிமா தியேட்டர்கள், பன்னடுக்கு திரையரங்குகள் (மல்டி பிளக்ஸ்), தங்கள் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளை கொண்டு வருகிற 15-ந்தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 100 பேருடன் நடத்தப்படலாம் என்ற சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார மற்றும் மதரீதியான, அரசியல் ரீதியான கூட்டங்களை, அதற்கும் மேற்பட்டோருடன் 50 சதவீத இருக்கைகளில் அதாவது, அதிகபட்சமாக 200 பேருடன் மண்டபங்களில், மூடப்பட்டுள்ள இடங்களில் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அரங்கில் அந்த மைதானத்துக்கு ஏற்ற அளவிலான எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அனுமதி வழங்கிவிட்டு, கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக திருமணங்களுக்காக காத்து நிற்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண மண்டபங்களுக்கும், இதுபோன்ற தளர்வுகளை அனுமதித்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல திருமணங்கள் நடந்து, நாங்களும் இல்வாழ்க்கையை தொடங்குவோமே! என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோல, 15-ந் தேதிக்குமேல் பள்ளிக்கூடங்கள், பயிற்சி நிலையங்கள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசாங்கம் வெளியிட்ட ஆணைகளின்படி, அக்டோபர் 1-ந்தேதி முதல் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு அறிய அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட ஆணை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

ஆக, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. இப்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆன்லைன் மூலம் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை 40 சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதமாகிவிட்டது. குறைக்கப்பட்ட 40 சதவீத பாடங்கள் எவை? எவை? என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பள்ளிக்கூடங்களில் ஒரு குழப்பமான நிலை இருக்கிறது. ஆக, குறைக்கப்பட்ட பாடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். “நீட், ஜே.இ.இ.” போன்ற தேர்வுகளில் முழுமையான பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். ஆனால், தமிழ்நாட்டில் பாடங்களை குறைப்பதால், தமிழக மாணவர்களால் அந்த தேர்வுகளை அடுத்த 2 ஆண்டுகளில் எதிர்கொள்ள முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே, இதுகுறித்து தமிழக கல்வித்துறை தீவிரமாக பரிசீலித்து, ஒன்று 40 சதவீத பாடகுறைப்புகளையும் விடுமுறை நாட்களிலாவது நடத்த முடியுமா? அல்லது “நீட், ஜே.இ.இ.” தேர்வுகளில் பாடத்திட்டத்தை குறைக்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில், ஊரடங்கில் தளர்வுகளும் வேண்டும், அதே நேரத்தில் இந்த தளர்வுகளால் கொரோனா பரவலின் வேகமும், உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடாது என்றால், அது மக்களின் கையில்தான் இருக்கிறது. தளர்வு காற்றை சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்தே சுவாசிக்கவேண்டும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

Next Story