நம்பிக்கை வெளிச்சம் நன்றாக தெரிகிறது!


நம்பிக்கை வெளிச்சம் நன்றாக தெரிகிறது!
x
தினத்தந்தி 2 Oct 2020 10:49 PM GMT (Updated: 2020-10-03T04:19:06+05:30)

இந்தியாவில் கடந்த 8½ மாதங்களாகவும், தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களாகவும் கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்து வருவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே கசக்கி பிழிந்துவிட்டது.

மத்திய, மாநில அரசுகளின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையே உள்ள நிதி பற்றாக்குறை விரிந்து கொண்டே போகிறது. காரணம் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், தனிநபர் வருமானம் பெருமளவில் குறைவு, வர்த்தக வீழ்ச்சி ஆகியவையாகும். எத்தனை காலம் தான் கொரோனா பாதிப்பு முடக்கநிலையை உருவாக்கி கொண்டிருக்குமோ? என்ற நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகள் பல தளர்வுகளை அறிவித்து, சகஜ வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளின் கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. வர்த்தகமும் கொஞ்சம், கொஞ்சமாக தழைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவை மீட்டெடுக்க தமிழக அரசு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்த குழு கடந்த மாதம் 21-ந் தேதி தன் அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, சி.ரங்கராஜன், ‘அடுத்த சில மாதங்களில் சகஜநிலை திரும்பிவிடும்’ என்று அறிவித்தார். அவர் கூறியது இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் சரக்கு-சேவை வரி வசூல் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாக இருந்த சரக்கு-சேவை வரி வசூல், இந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.95 ஆயிரத்து 480 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாத வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 10.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் வரி வசூல் என்றால், தமிழ்நாட்டின் வரி வசூல் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளது. செப்டம்பர் மாதத்தில் சரக்கு-சேவை வரி வசூல் தமிழ்நாட்டில் ரூ.6 ஆயிரத்து 454 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.5 ஆயிரத்து 616 கோடியாக இருந்த நிலையில், இப்போது 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் சரக்கு-சேவை வரி வசூல் உயர்ந்திருப்பது பொருளாதார நடவடிக்கையில் தமிழ்நாடு சகஜநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. இதில் மகிழ்ச்சி தரத்தக்க விஷயம் என்னவென்றால், நாட்டில் கார், இருசக்கர வாகனங்கள், டிராக்டர் விற்பனை, ஏற்றுமதி, சரக்கு ரெயில் வருவாய் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல்-டீசல் விற்பனையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விற்பனை அதிகரித்தால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தங்கள் தொழிலை பார்க்க, வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று பொருளாகும். இதுபோல் டீசல் விற்பனை கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த விற்பனையில் 93 சதவீதத்தை எட்டிவிட்டது. டீசல் விற்பனை அதிகரிக்கிறது என்றால் சரக்கு போக்குவரத்து, கட்டுமான தொழில் மற்றும் விவசாயப் பணிகள் அதிகரித்துவிட்டன என்பதைத்தான் காட்டுகிறது. சமுதாயத்தில் ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு இருந்தாலும் வளர்ச்சி விடியல் தொடங்கிய நிலையில் விழித்துக்கொண்டதற்கே இவ்வளவு உயர்வு என்றால், இன்னும் எழுந்து முழுமையான பாய்ச்சலை தொடங்கினால் பொருளாதார நிலை உச்சநிலைக்கு செல்ல முடியும். உற்பத்தி பெருக்கெடுக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், வரி வசூல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. எப்படி சுரங்க தொழிலாளர்கள் நெற்றியில் ஒளிவிளக்கை கட்டிக்கொண்டு இருளில் பணியாற்றுவார்களோ, அதுபோல கொரோனா பாதிப்பு என்ற இருளில் முழுமையான பாதுகாப்பு என்ற ஒளிவிளக்குகளை ஏந்திக்கொண்டு எல்லோருமே அவரவர் பணிகளை, அது அரசாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி தொடங்குவது தான் எதிர்காலத்துக்கு நல்லது.

Next Story