இந்தி தெரியாதா?; கடன் இல்லை!


இந்தி தெரியாதா?; கடன் இல்லை!
x
தினத்தந்தி 4 Oct 2020 8:54 PM GMT (Updated: 2020-10-05T02:24:03+05:30)

தமிழக மக்கள் தன்னை பெற்ற தாய்க்கு இணையாக தாய் மொழியாம் தேன் தமிழை நெஞ்சில் வைத்து போற்றி வணங்குவார்கள். அதனால்தான், “தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்று முழங்கினார், புரட்சிகவிஞர் பாரதிதாசன்.

தமிழக மக்கள் தன்னை பெற்ற தாய்க்கு இணையாக தாய் மொழியாம் தேன் தமிழை நெஞ்சில் வைத்து போற்றி வணங்குவார்கள். அதனால்தான், “தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்று முழங்கினார், புரட்சிகவிஞர் பாரதிதாசன். மொழி உணர்வை பொறுத்த அளவில், தமிழர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானவர்கள். மொழி என்பது எல்லா இனங்களுக்கும் தகவல் தொடர்புக்கான ஒரு கருவி என்று கருதப்படலாம். ஆனால், தமிழர்களை பொறுத்த அளவில், மொழி என்பது வெறும் கருவி அல்ல. அது பண்பாட்டின் அடையாளம். பாரம்பரியத்தின் சின்னம். வரலாற்றை சேமித்து வைத்திருக்கின்ற கருவூலம். அதனால்தான், மொழியை தமிழர்கள் விழியாக கருதுகிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போலத்தான், இந்தி திணிப்பு என்ற ஒரேயொரு செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழக மக்கள், 1967-ம் ஆண்டு ஒன்றாக இணைந்து ஆட்சியையே மாற்றியமைத்தார்கள். ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம், தமிழர்கள் தங்கள் மொழி உணர்வில் என்றென்றும் மாறாத உணர்வோடு இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இயங்கிவரும் மத்திய அரசு அலுவலகங்களில், குறிப்பாக ரெயில்வே, தபால் இலாகா, வருமான வரித்துறை, வங்கிகள் போன்ற மக்கள் தொடர்பு அதிகமுள்ள அலுவலகங்களில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் அனைத்து பதவிகளிலும் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தமிழ் தெரியவில்லை என்பதால், தமிழ் மட்டுமே தெரிந்த தமிழக மக்களோடு தங்கள் மொழியான இந்தியில் பேசி, அவர்கள் பேசுவதே என்னவென்று தெரியாத அளவில், தமிழக மக்கள் விழிபிதுங்கி நிற்கும்நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில்கூட, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் போலீஸ், இந்தியில் ஏதோ பேச, கனிமொழி எம்.பி. தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னவுடன், நீங்கள் இந்தியரா? என்பது போல கேள்விகளை கேட்டுள்ளார். தற்போது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, ஜெயங்கொண்டத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு ஒரு ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி, வணிக வளாகம் கட்டுவதற்காக கடன் கேட்டு அதற்குரிய அனைத்து ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப பாரத்தை கொண்டுபோய் மேலாளரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த மேலாளர் விஷால் காம்பிளே, “உங்களுக்கு இந்தி தெரியாதா?” என்று கேட்டிருக்கிறார். டாக்டர் உடனே, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன் அந்த வங்கி மேலாளர் தான் மராட்டியத்தை சேர்ந்தவர் என்றும், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. மேலும், நீங்கள் இணைத்துள்ள உங்கள் நிலம் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் தமிழில் இருக்கின்றன. என்னால் அதைப்படித்து சரிபார்க்க முடியவில்லை என்று கூறி, விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக டாக்டர் கூறுகிறார்.

வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டது. வேறு இடங்களுக்கு மாற்றினாலும் அங்கேயும் இதேநிலைதானே ஏற்படும். எனவே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல, எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்!. சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை! என்பதை ஒரு நல் அறிவுரையாக மத்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த அதிகாரிகள், ஊழியர்களையே நியமிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் எவ்வளவோ தமிழர்கள், அந்தந்த துறைகள், அந்தந்த வங்கிகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களை தமிழ்நாட்டிற்கு இடமாறுதல் செய்யலாம். மொத்தத்தில் மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ரெயில்களிலும், அலுவலர்களுக்கும், மக்களுக்கும் இடையே தமிழ்மொழி தெரியாது என்ற பிரச்சினை ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடக்கூடாது. தமிழக மக்களுக்கு தமிழில் பேச உரிமை உண்டு. அதை புரிந்துகொண்டு பதிலளிக்கும் பொறுப்பும், கடமையும் அந்த அலுவலர்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

Next Story