எல்லோருக்கும் ரெயில் பயண வசதி வேண்டும்!


எல்லோருக்கும் ரெயில் பயண வசதி வேண்டும்!
x
தினத்தந்தி 5 Oct 2020 8:59 PM GMT (Updated: 5 Oct 2020 8:59 PM GMT)

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. அதிகரித்து கொண்டே இருந்தாலும், ஆதி மனிதன் குகைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது போல, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. அதிகரித்து கொண்டே இருந்தாலும், ஆதி மனிதன் குகைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது போல, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க முடியாது. மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும், அரசின் பொருளாதாரமும் சீரடைய வேண்டும் என்றால் எல்லா அலுவலகங்களும், அது அரசு அலுவலகங்கள் என்றாலும் சரி, தனியார் அலுவலகங்கள் என்றாலும் சரி, தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் முழுவீச்சில் இயங்கினால் தான் முடியும். அப்படி எல்லாமும் இயங்கவேண்டும் என்றால் மக்கள் தங்கள் பணி இடங்களுக்கு செல்லவும், மருத்துவ வசதிகளை பெறவும், பொருட்களை வாங்குவதற்கும் நிச்சயம் போக்குவரத்து வசதி வேண்டும். பல மாதங்களுக்கு பிறகு இப்போது பஸ் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ரெயில் வசதி தொடங்கப்படாதநிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கும், பணிபுரியும் இடங்களில் இருந்து வீட்டிற்கு திரும்புவதற்கும் ஏராளமான இடங்களில் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருந்தார்கள். இந்தநிலையில் நேற்று முதல் சென்னையில் மட்டும் மின்சார ரெயில்கள் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக இயங்க தொடங்கி உள்ளது.

தமிழக அரசு விடுத்த கோரிக்கையின்பேரில் தென்னக ரெயில்வே மிக குறைந்த எண்ணிக்கையில் அலுவலர்கள் சிறப்பு ரெயில் என்ற பெயரில் இந்த ரெயில்களை இயக்குகிறது. இதில் எல்லோரும் பயணம் செய்துவிட முடியாது. இதற்காக அரசு தலைமை செயலகத்தில் பொதுத்துறை துணை செயலாளரான எஸ்.சாந்தி என்ற அதிகாரியை நியமித்து இருக்கிறது. அவரிடம், ‘இது போல ரெயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். அந்த அனுமதிச்சீட்டில் பெயர், பதவி, அரசில் என்ன துறையில் வேலைபார்க்கிறார்?, எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்? என்ற குறிப்புகள் இருக்கும். அந்த அனுமதிச்சீட்டோடு அவரவர் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து ‘போட்டோ’ ஒட்டிய அடையாள கார்டை காண்பித்தால் தான், டிக்கெட்டோ, சீசன் டிக்கெட்டோ வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் போலீசார் சோதனை செய்வார்கள். பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு ‘டிக்கெட்’ வழங்குவதில் இருந்து பயணம் செய்யும் ரெயில் பெட்டிகளிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதெல்லாம் சரிதான். வரவேற்க தகுந்தது தான்.

ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு செல்லவில்லை, தனியார் ஊழியர்களும் தினமும் செல்ல வேண்டி உள்ளது. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தினமும் பணிக்கு சென்று திரும்ப வேண்டி இருக்கிறது. மருத்துவமனைக்கு செல்பவர்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்கு, வர்த்தக நிறுவனங்களுக்கு செல்பவர்கள் என்று எல்லோருக்கும் ரெயில் போக்குவரத்து வசதி தேவையாக இருக்கிறது. எனவே சென்னையில் அரசு ஊழியர்களுக்கு தனியாக மின்சார ரெயில்களை விட்டது போல, மற்றவர்களுக்கும் தனியாக மின்சார ரெயில் வசதி கண்டிப்பாக வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, எல்லோரும் முககவசம் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு கை கழுவ வேண்டும் என்று பஸ்களில் இப்போது நடைமுறைகள் இருப்பது போல, ரெயில்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றி எல்லோருக்கும் ரெயில் வசதி வேண்டும். மேலும் சென்னையில் மட்டுமே எல்லோரும் பணிக்கு போகிறார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் வேலைக்கு போகிறார்கள். தங்கள் பணிகளை கவனிக்கிறார்கள். எனவே தமிழக அரசு அனைத்து மக்களும் பயணம் செய்யும் வகையில் சென்னையில் மின்சார ரெயில்களும், தமிழ்நாடு முழுவதும் பயணிகள் ரெயில்களையும் விடுவதற்கு கோரிக்கைகள் விட வேண்டும். அதனை ரெயில்வே நிர்வாகம் ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story