தமிழ்நாடு முழுவதும் ‘மியாவாக்கி’ காடுகள்!


தமிழ்நாடு முழுவதும் ‘மியாவாக்கி’ காடுகள்!
x
தினத்தந்தி 7 Oct 2020 9:20 PM GMT (Updated: 7 Oct 2020 9:20 PM GMT)

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தினத்தந்தி’யின் சென்னை பதிப்பில் அடர்ந்த மரங்களுடன் கூடிய ஒரு குட்டி காட்டின் படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படத்தை மட்டும் பார்த்தவர்கள் இந்த காடு எங்கே இருக்கிறது? மேற்கு தொடர்ச்சி மலையிலா? என்று நினைக்கும் அளவுக்கு மிக அடர்த்தியாக அந்த காட்டின் படம் இருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தினத்தந்தி’யின் சென்னை பதிப்பில் அடர்ந்த மரங்களுடன் கூடிய ஒரு குட்டி காட்டின் படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படத்தை மட்டும் பார்த்தவர்கள் இந்த காடு எங்கே இருக்கிறது? மேற்கு தொடர்ச்சி மலையிலா? என்று நினைக்கும் அளவுக்கு மிக அடர்த்தியாக அந்த காட்டின் படம் இருந்தது. ஆனால் செய்தியை படிக்கும் போதுதான் சென்னையின் மைய பகுதியான அடையார் காந்திநகரில் கோட்டூர்புரம் ரெயில்நிலையம் அருகேயுள்ள காடு என்பது தெரியவந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் ‘மியாவாக்கி’ முறையில் 45 வகையான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ‘மியாவாக்கி’ காடு வளர்ப்பு முறை என்பது ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளரும், சுற்றுச்சூழல் வல்லுனருமான அகிரா மியாவாக்கி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும்.

உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்பமயமாதல் அதிகரித்துவிட்டது. இதே நிலைமை நீடித்தால் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக இருக்கும் என்பதை உணர்ந்த அவர், நகர்ப்புற காடு வளர்ப்புகளினால் வெப்பமயமாக்கும் சூழ்நிலை மாற்றி அமைக்கப்படும் என்று ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளார். அவர் பெயரிலேயே இத்தகைய காடுகள் ‘மியாவாக்கி’ காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. குறைந்த பரப்புள்ள இடங்களில் ஏராளமான மரங்களை உருவாக்குவதுதான் இந்த ‘மியாவாக்கி’ காடுகள் ஆகும். அகிரா மியாவாக்கி, ஜப்பானிலும், உலகில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மியாவாக்கி’ காடுகளை உருவாக்கியுள்ளார். அதனை பின்பற்றிதான் சென்னை மாநகராட்சி சென்னையில் தற்போது கோட்டூர்புரம் ரெயில்நிலையம் அருகே ‘மியாவாக்கி’ காட்டை உருவாக்கியுள்ளது. இதைப்போல, வளசரவாக்கத்தில் 20 சென்ட் நிலத்தில் 50 வகைகளில் 700-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், முகலிவாக்கத்தில் 60 சென்ட் நிலத்தில் 2,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் துணை கமிஷனர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் இதில் விசேஷ அக்கறை எடுத்து சென்னை நகரில் புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும், அதைத்தொடர்ந்து மேலும் 5 இடங்களிலும் ‘மியாவாக்கி’ முறையில் அடர்ந்த காடுகளை உருவாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த காடுகளில் விதவிதமான மரக்கன்றுகளை நடுவது, வளர்ப்பது மிகவும் எளிது. மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி காடுகள் ஆகிவிடும். அதன்பின்னர் எந்த பராமரிப்பும் தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் ‘கார்பன்டை ஆக்சைடை’ இந்த மரங்கள் உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும். இதுமட்டுமல்லாமல், இந்த மரங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாக குறைக்கப்பட்டு, காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் மழைபொழிவும் அதிகரிக்கும். ஏராளமான நுண்ணுயிர்கள், பறவைகள், புழு, பூச்சி பெருக்கம் அதிகமாக இருக்கும். குட்டி காடுகளாக உருவான பிறகு சுற்றுச்சூழலை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இடமாக அமையும். நகர்ப்புறத்திலுள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் காடுகளை படத்தில்தான் பார்த்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் அடர்ந்த வனம் என்றால் என்ன? என்பதை நேரில் தெரிந்துகொள்ள முடியும். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சியை, தமிழ்நாட்டில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தொடங்கி நடத்தவேண்டும். தனியாரும் பயனில்லாத தங்கள் நிலங்களில் இந்த ‘மியாவாக்கி’ காடுகளை உருவாக்கலாம். இதற்கு உரிய ஊக்கத்தை தமிழக அரசு வழங்கினால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும் குட்டி காடுகளை வளர்க்கலாம். வெப்பமயமாவதையும் குறைத்து மழைப்பொழிவையும் அதிகரிக்கலாம் என்பதால், இதற்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story