வீரம் காட்டிய இடத்தில் தியாகச் சின்னம்!


வீரம் காட்டிய இடத்தில் தியாகச் சின்னம்!
x
தினத்தந்தி 8 Oct 2020 9:16 PM GMT (Updated: 8 Oct 2020 9:16 PM GMT)

மறைந்த கலைஞர் கருணாநிதி 1970-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலைபோனதில்லை. தமிழர்களின் வீரமும் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று கொடிநாள் செய்தியில் கூறியிருந்தார்.

மறைந்த கலைஞர் கருணாநிதி 1970-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலைபோனதில்லை. தமிழர்களின் வீரமும் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று கொடிநாள் செய்தியில் கூறியிருந்தார். அதன்படி, பண்டைய காலங்களில் இருந்து இந்திய நாட்டின் போர் வீரர்கள் குறிப்பாக, தமிழ்நாட்டின் வீரர்களின் வீரம் தன்னிகரற்று இருக்கிறது. இந்திய ராணுவத்தில் தமிழக வீரர்களின் ஆற்றல் முப்படைகளிலும் பரிணமிக்கிறது. இந்தநிலையில், கடந்த ஜூன் 15-ந்தேதி கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் மோதலில், இந்திய ராணுவத்தில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் ஹவில்தார் பழனி உள்பட 20 பேர் மிக வீரத்துடன் எதிரிகளோடு போராடி வீரமரணத்தை தழுவியிருக்கிறார்கள். 1967-ம் ஆண்டு சீனாவோடு நடந்த போரில் 80 இந்திய வீரர்கள் உயிரிழந்தபிறகு, ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பாகும் இது. சீன வீரர்கள் தரப்பில் நிறைய பேர் உயிரிழந்திருந்தாலும் அதை சீனா தெரிவிக்கவில்லை. ஏனெனில், சீன ராணுவத்தின் நிலைப்பாடே உண்மையை மறைப்பதுதான். சீனாவில் உள்ள மிகப்பெரிய ராணுவத்திட்ட வகுப்பு நிபுணர் என்று பெயர் பெற்ற சன் சூ என்பவர் எழுதிய “போர்க்கலை” என்ற புத்தகத்தில், போர் என்பதே ஏமாற்றுவதை அடிப்படையாக வைத்துத்தான் என்று எழுதியிருக்கிறார். ஆக, ஒருபோதும் சீனா தன்னுடைய இழப்புகளை பகிரங்கமாக சொன்னதில்லை.

உயிரிழந்த 20 வீரர்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள், அவர்கள் தியாகத்தை போற்றும் வகையில், நல்ல நிவாரணத்தை அளித்துள்ளது. உயிரிழந்த தமிழக வீரர் கே.பழனி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து வானதி தேவிக்கு, உணவு வழங்கல் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை சில நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தி.மு.க. சார்பிலும் நிதி வழங்கப்பட்டது.

இப்போது அந்த வீரர்கள் வீரமரணம் அடைந்த கல்வான் பள்ளத்தாக்கில், “கல்வான் வீரர்கள்” என்று பொறிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் இந்திய ராணுவத்தால் எழுப்பப்பட்டுள்ளது. அதில், அவர்கள் பெயர்கள், பதவி விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 7-வது பெயராக கே.பழனி பெயர் இருக்கிறது. அந்த நினைவுச்சின்னத்திலேயே அவர்கள் போரிட்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் எதிர்காலத்தில் நமது ராணுவ வீரர்களுக்கு, அந்த தியாக சீலர்களுக்கு மரியாதை செய்ய வாய்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தலைவணங்கவும் வாய்ப்பளிக்கும். இந்திய ராணுவம் எழுப்பியுள்ள இந்த நினைவுச்சின்னம் நிச்சயமாக போற்றுதலுக்குரியது, வணக்கத்துக்குரியது. அந்த 20 பேர் குடும்பங்களையும் ராணுவம் அங்கு அழைத்துச்சென்று அவர்களின் குடும்பத் தலைவர்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய வீரத்துக்காக நாடு வீரவணக்கம் செலுத்துகிறது என்ற வகையில், எழுப்பப்பட்டுள்ள சின்னத்தை காட்டி அவர்களை பெருமைப்பட வைக்கவேண்டும்.

தமிழ்நாட்டிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் உயிரிழந்த வீரர்களின் நினைவுச்சின்னம் சென்னையில் உள்ளது. அதில், 1948-ம் ஆண்டு காஷ்மீர் ஆக்கிரமிப்பில் போரிட்டு உயிரிழந்த வீரர்கள், இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போர்களில் உயிரிழந்தவர்களின் நினைவுச்சின்னமும் இருக்கிறது. இதுபோல கல்வான் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவுச்சின்னமும் அங்கு வைக்கப்பட்டு, அவர்கள் மறைந்தநாளில் ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்தவேண்டும். எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ள, அவர்களைப்பற்றிய குறிப்புகளையும் கல்வெட்டுகளில் பொறித்து வைக்கவேண்டும் என்பதே நமக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு தலைவணங்கும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story