தலையங்கம்

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலுக்கு கிடைத்த வெற்றி! + "||" + Victory for the unanimous voice of Tamil Nadu!

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலுக்கு கிடைத்த வெற்றி!

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலுக்கு கிடைத்த வெற்றி!
தமிழுக்கும், தமிழர்களுக்கும் தீது எனில், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் - ஆயிரம் கொள்கை மாறுபாடுகள் இருப்பினும், அதையெல்லாம் மறந்து, உணர்வுள்ள தமிழ் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்குமாயின், வெற்றிக்கிட்டும் என்பதற்கு, தொல்லியல் துறையில் முதுகலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் விடுபட்டிருந்த தமிழை சேர்த்ததே ஒரு அடையாளமாகும்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் தீது எனில், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் - ஆயிரம் கொள்கை மாறுபாடுகள் இருப்பினும், அதையெல்லாம் மறந்து, உணர்வுள்ள தமிழ் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்குமாயின், வெற்றிக்கிட்டும் என்பதற்கு, தொல்லியல் துறையில் முதுகலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் விடுபட்டிருந்த தமிழை சேர்த்ததே ஒரு அடையாளமாகும். மத்திய அரசாங்க தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் 2020-2022-ம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டுகால முதுகலை பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு தொடர்பான விளம்பரம் பத்திரிகைகளில் வந்தது. இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.


மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் சீரிய முயற்சியாலும், சோனியாகாந்தியின் உதவியாலும், தேனிலும் இனிய தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதும், கோயம்புத்தூரில் உலகமே வியக்கும் வண்ணம் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு நடந்ததும் மத்திய அரசாங்கத்துக்கு எப்படி மறந்துபோய்விட்டது? என்பது தெரியவில்லை. இப்போது இந்த பட்டயப்படிப்பில் தமிழுக்கு இடமில்லை என்றவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ என்று அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து எழுப்பிய குரல் மத்திய அரசின் காதுகளில் விழுந்தது.

முதல்-அமைச்சர் இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “இந்திய தொல்லியல்துறை ஆய்வு உள்பட பல்வேறு துறைகள் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து மொழிகளின் சார்பிலும் 48 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, அவை நகல் எடுக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் மொழிக்குரிய கல்வெட்டுகள் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பாதிக்குமேல் தமிழுக்குரியது” என்று அசைக்கமுடியாத ஆதாரத்தோடு அந்த கடிதத்தை எழுதினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரிய வஞ்சக செயலாகும். தமிழை திட்டமிட்டு தவிர்த்திருப்பது தமிழ்மொழியின் மீதான பண்பாட்டு படையெடுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை ஒழித்திடமுனையும் இந்த பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கடும் கண்டன குரல் எழுப்புவோம்” என்று எச்சரித்திருந்தார். இந்த ஒற்றுமை குரலின் விளைவாக, இப்போது தமிழ்மொழியும் மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதியில் இடம்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்புக்குரியது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மத்திய அரசாங்கத்தால் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரபுமொழி என அனைத்து மொழிகளும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தொன்மையான செம்மொழி என்று கருதப்படும் தமிழை மறந்துவிட்டு, இந்தியாவின் தொன்மையை கணக்கிட முடியாது. தமிழ்நாட்டையும் நிச்சயமாக மறந்துவிட முடியாது. அதனால் தான் இந்திய வரலாற்றை இமயமலையிலிருந்து தொடங்குவதைவிட, பொதிகை மலையிலிருந்து தொடங்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இங்குள்ள தொன்மையை ஆதிச்சநல்லூர், கீழடி உள்பட பல அகழ்வாராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், தொல்லியல்துறைக்கு தமிழின் தொன்மை தெரிந்திருக்க வேண்டாமோ? தமிழை விட்டுவிட்டால் இது தொல்லியல்துறை ஆகுமோ? என்பதால்தான் தமிழ்நாட்டு தலைவர்கள் ஓங்கி குரல் எழுப்பினார்கள். ஒருபக்கம் ஓங்கி குரல் எழுப்பினால் தமிழுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டாலும், அப்படி குரல் எழுப்புவதன் மூலமாகத்தான் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கும் என்பது நிச்சயமாக தமிழுக்கு பெருமை தருவது அல்ல. தமிழுக்கு இயல்பான உரிமைகளை, பெருமைகளை தமிழ்நாடு கேட்காமல், மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும் என்பது தான் தமிழர்களின் நியாயமான ஆசையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
2. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
3. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
4. அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐ.பி.எல். போட்டி; 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.