முககவசம்தான் கொரோனா தடுப்பு மருந்து!


முககவசம்தான் கொரோனா தடுப்பு மருந்து!
x
தினத்தந்தி 12 Oct 2020 11:30 PM GMT (Updated: 2020-10-13T00:31:26+05:30)

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில்கூட, மக்கள் முககவசம் அணியவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இப்போதுள்ள நிலையில், முககவசம் அணியாத மாநிலம், பாதுகாப்பற்ற மாநிலம், அபாயகரமான மாநிலம், கொரோனா தொற்று எந்தநேரமும் வந்து கட்டிப்பிடித்துக்கொள்ள வகைசெய்யும் மாநிலம் என்றநிலை ஏற்பட்டுள்ளது. மாதங்கள் உருண்டோடியும் கொரோனா பரவலுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. கொரோனா இந்தியாவில் கால்தடம் பதித்த நாள்முதல் பிரதமர் நரேந்திரமோடி, “முககவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். இதுதான் பொன் விதி” என்று மக்களிடம் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார். ‘ஒரு மீட்டர் இடைவெளி- முககவசம் நீ அணி’ என்ற உறுதிப்பாட்டை பின்பற்றுங்கள்” என்றும் கூறி வருகிறார்.

இப்போது 9-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில்கூட, மக்கள் முககவசம் அணியவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் என்ன சொன்னாலும் கேட்பதுபோல இல்லை. ஆரம்பத்தில் பெரும்பாலான மக்கள் முககவசம் அணிந்த நிலையில், இப்போது மிகவும் அலட்சியம் காட்டும்நிலை ஏற்படுகிறது. தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் தற்போது ஏறத்தாழ 35 சதவீத மக்கள் முககவசம் அணிவதில்லை. அப்படியே முககவசம் அணிபவர்களும்கூட மூக்குக்குகீழ் வைப்பதும், கழுத்துக்குகீழ் தொங்கவிடுவதும் என்று முறையாக அணியாமல் தங்களை தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியின்போதும், கேரளாவில் ஓணம் பண்டிகையின்போதும் ஏராளமான மக்கள் முககவசம் அணியாததால்தான் அந்த மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று ஒரு தகவல் வருகிறது. அடுத்து நவராத்திரி வருகிறது. தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பல பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகைகளின்போதெல்லாம் கொரோனா பரவல் அதிகமாகும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதிலிருந்து மக்களை காத்துக்கொள்ள முககவசம்தான் “சமூக தடுப்பு மருந்து” என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியிருக்கிறார். மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர்கூட, “முககவசம் அணியாதவர்கள் மீது ரூ.1,000, ரூ.2 ஆயிரம் என்று அபராதத்தை உயர்த்தி விதித்தால் என்ன?” என்று கேட்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முக்கிய ஆயுதமாக கருதப்பட்டுவரும் முககவசம், இப்போது காசநோயில் இருந்தும் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு ஆயுதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காசநோய் மிகக்கொடிய நோய். அதனால்தான் அதை எலும்புருக்கி நோய் என்கிறார்கள். உலகிலுள்ள மொத்த காசநோயாளிகளில் 25 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அதிக காசநோயுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் உண்டு. காசநோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால், முககவசம் அணியவேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் கொரோனா, காசநோய் இரண்டுமே பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளியே வருகிற நீர்த்துளிகளால்தான் பரவுகிறது. ஜப்பானில் மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை எப்படியொரு கடமையாக கருதுகிறார்களோ, அதுபோல தமிழ்நாட்டிலும் முககவசம் அணிவது கட்டாயம் என்ற ஒரு உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும். முககவசம் அணிவது ஒன்றே, கொரோனாவில் இருந்தும், காசநோயில் இருந்தும் பாதுகாக்கும் என்ற விழிப்புணர்வை மீண்டும் இப்போது ஒரு வேகத்தோடு பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் மத்திய, மாநில அரசுகள் விளம்பரப்படுத்த வேண்டும். முககவசம் வாங்கமுடியாத நிலையிலுள்ள ஏழை-எளிய மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கும், அரசு அலுவலகங்களிலுள்ள பணியாளர்களுக்கும், அங்குவரும் பொதுமக்களுக்கும் முககவசம் இலவசமாக வழங்கமுடியுமா? என்பதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும். மக்களும் முககவசம் என்பது நாம் அணியும் ஆடைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு வெளியே செல்லும்போது, ஆடைகள் அணிவதுபோல, முககவசம் அணிவதும் அவசியம் என்றநிலையை கடைபிடிக்கவேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story