மத்திய மந்திரிசபையில் தமிழ்நாட்டுக்கு இடம்!


மத்திய மந்திரிசபையில் தமிழ்நாட்டுக்கு இடம்!
x
தினத்தந்தி 14 Oct 2020 9:11 PM GMT (Updated: 14 Oct 2020 9:11 PM GMT)

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த வாரம் மறைந்தார். 2019-ம் ஆண்டு பா.ஜ.க. மிகப்பெரும்பான்மையான பலத்துடன் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது.

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த வாரம் மறைந்தார். 2019-ம் ஆண்டு பா.ஜ.க. மிகப்பெரும்பான்மையான பலத்துடன் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. 24 கேபினட் மந்திரிகள், தனிப் பொறுப்புடன் கூடிய 9 மந்திரிகள், 24 இணை மந்திரிகள் என பெரிய மந்திரிசபை பதவி ஏற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற சிவசேனா, சிரோமணி அகாலிதளம், லோக் ஜனசக்தி, இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சிகளுக்கு மட்டும் மந்திரிசபையில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு பட்டியலில் இடம் கொடுக்கப்படவில்லை என்பது முதலில் இருந்தே பெரிய குறையாக உள்ளது. இவ்வளவிற்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் வரை அனேகமாக எல்லா மந்திரிசபைகளிலும் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஜவஹர்லால் நேரு தலைமையில் முதல் மந்திரிசபை அமைந்தது. தொடக்க காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜாஜி, ஆர்.கே.சண்முகம் செட்டி, என்.கோபால்சாமி அய்யங்கார், கே.சந்தானம் ஆகிய 4 பேர் மந்திரிகளாக இருந்தனர். அதிலிருந்து அனேகமாக எல்லா மந்திரிசபைகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர். 2004-ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 6 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி வகித்தனர். 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாக பொறுப்பு ஏற்ற நேரத்தில், கூட்டணி கட்சியாக இல்லாததால் அ.தி.மு.க.வுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்றாலும், எதிர்க்கட்சி என்ற முறையில் தம்பிதுரை மக்களவை துணை சபாநாயகராக இருந்தார். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் இணை மந்திரியாக இருந்தார். மத்திய மந்திரிசபையில் இருந்து இப்போது சிவசேனா வெளியேறிவிட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துவிட்டார். ராம்விலாஸ் பஸ்வான் காலமாகிவிட்டார்.

தற்போது மக்களவையில் உறுப்பினர்கள் இல்லாமல், மாநிலங்களவையில் ஒரே ஒரு உறுப்பினராக மட்டும் இருக்கும் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் இணை மந்திரியாக பதவி வகிக்கிறார். எனவே கூட்டணி கட்சிகளில் ஒரு கட்சி மட்டும் மந்திரிசபையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதில் பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சி ஏற்படவேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டு பெறவேண்டும். இதை செய்தால் பா.ஜ.க. அரசாங்கத்துக்கு 2 பெருமைகள் கிடைக்கும். ஒன்று ஒரு கூட்டணி

கட்சிக்கு மட்டும் மந்திரி பதவி என்பதைவிட, மேலும் ஒரு கூட்டணி கட்சிக்கு இடம் அளித்த பெருமையும், பிரதிநிதித்துவம் இல்லாத தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்த பெருமையும் கிடைக்கும். தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்குத்தான் மந்திரிசபையில் இடம் இருக்கிறதே? என்ற வாதம் எழலாம். ஆனால் அவர்களுடைய பிரதிநிதித்துவம் அதாவது, மாநிலங்களவை உறுப்பினர்களாக பிற மாநிலங்களில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் மக்களவைக்கு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு உறுப்பினர்தானே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்ற வாதமும் ஏற்புடையது அல்ல. ஏனெனில் மாநிலங்களவையில் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேசியத்தை வளர்த்ததிலும், தேசிய பொருளாதாரத்தை வளர்த்ததிலும் சுதந்திர இந்தியாவில் தமிழர்களுக்கு பெரும் பங்கு இருந்திருக்கிறது. அரசியல் மாற்றங்களால் அந்த தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது. தமிழர்களை தரையில் நிற்க வைத்துவிட்டு தேசிய நீரோட்டம் ஓட முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.

Next Story