தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன!


தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன!
x
தினத்தந்தி 16 Oct 2020 8:46 PM GMT (Updated: 16 Oct 2020 8:46 PM GMT)

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதே, தேர்தல் நடக்குமா? அல்லது தள்ளிப்போகுமா? என்ற சந்தேகத்திற்கே இடமில்லை.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதே, தேர்தல் நடக்குமா? அல்லது தள்ளிப்போகுமா? என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. பீகாரில் இப்போது சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டிலும் மே மாதம் நடக்கும் தேர்தலுக்காக இப்போதே அனைத்து கட்சிகள் மத்தியிலும் பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டன. ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற இலக்கை நோக்கி அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளிடையே போட்டி தொடங்கிவிட்டது. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு இப்போதே விடை கிடைத்துவிட்டது. அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிசாமி தான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி.யான பி.எச்.மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் ப.மோகன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்.எல்.ஏ. கி.மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு கட்சிக்கு பல ஆலோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்குழு கூட்டம் முடிந்துவிட்டது. விரைவில் பொதுக்குழுவும் கூட இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் தான் கூட்டணியில் இருக்க முடியும் என்பதை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பட்டவர்த்தனமாக அறிவித்து சில சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில், இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லை. தி.மு.க.வில் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை தனியாக அறிவிக்க வேண்டியதில்லை. அவர் தேர்தல் பணிகளை முன்பே தொடங்கிவிட்டார். காணொலிக்காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள் முதல் அனைத்து பொறுப்பில் உள்ளவர்களுடனும் தினமும் கூட்டம் நடத்தி வருகிறார். இப்போது தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், தி.மு.க. மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி., கொள்கைப்பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் உடனடியாக பணிகளைத் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், டெல்லி எடுக்கும் முடிவு தான் எல்லாமே என்பதால் அங்கிருந்து தான் உத்தரவுகள் வரவேண்டும். பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தேர்தலை மனதில் வைத்து மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்களை வலைவீசி பிடிக்கும் பணிகளை தொடங்கிவிட்டது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்புவை இழுத்துவிட்டது. வீரவேலை கையில் ஏந்திக்கொண்டு வெற்றி யாத்திரையாக திருத்தணியில் தொடங்கி, அறுபடை வீடுகளுக்கும் சென்று திருச்செந்தூரில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. பா.ம.க.வில் அன்புமணியின் தம்பிகள் படை, அன்புமணியின் தங்கைகள் படை, அன்புமணியின் மக்கள் படை என்று முப்படைகளை கிராமம்தோறும் அமைக்கும் பணிகளிலும் தீவிரமாக உள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? அல்லது தொடங்க மாட்டாரா? என்பதற்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கவில்லை. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எங்கள் சின்னத்தில் தான் நிற்போம் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டன. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழுவும், செயற்குழுவும் நேற்று கூடி தேர்தல் தொடர்பான பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. மொத்தத்தில், அனைத்து கட்சிகளிடையேயும் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சிகளுமே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், யார் - யார்? எந்த கூட்டணியில் இருக்கப்போகிறார்கள்?, யார் - யாருக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும்? அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணிகளோடு நிற்குமா? மேலும் ஓரிரு கூட்டணிகள் உருவாகுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு மிக விரைவில் விடை தெரிந்துவிடும். “இன்று இங்கிருப்போர் நாளை இல்லை என்ற நிலைகூட உருவாகும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார், அரசியல் நோக்கர் ஒருவர்.

Next Story