கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கும் கலந்தாய்வு!


கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கும் கலந்தாய்வு!
x
தினத்தந்தி 18 Oct 2020 8:09 PM GMT (Updated: 2020-10-19T01:39:19+05:30)

இந்த ஆண்டு “நீட்” தேர்வில் தமிழக மாணவர்களின் சாதனை பாராட்டத்தக்க அளவில் இருக்கிறது. பொதுவாக “நீட்” தேர்வு மத்திய கல்வி திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களால் பெருமளவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குறை கடந்த 3 ஆண்டுகளாக கூறப்பட்டுவந்தது.

இந்த ஆண்டு “நீட்” தேர்வில் தமிழக மாணவர்களின் சாதனை பாராட்டத்தக்க அளவில் இருக்கிறது. பொதுவாக “நீட்” தேர்வு மத்திய கல்வி திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுவதால், மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களால் பெருமளவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குறை கடந்த 3 ஆண்டுகளாக கூறப்பட்டுவந்தது. நமது கல்வித்தரத்தை, ஏன் மத்திய கல்வித்திட்டத்திற்கு இணையாக உயர்த்தக்கூடாது? என்ற நல்ல நோக்கத்தில், 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக இந்த ஆண்டு “நீட்” தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 174 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டது என்று பெருமைபடக்கூறுகிறார், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

இந்த ஆண்டு “நீட்” தேர்வில் கலந்துகொண்ட தமிழக மாணவர்களில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 48.5 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த ஆர்.ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளார். நாமக்கல்லை சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 705 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், சென்னையை சேர்ந்த ஜி.ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் படித்த ஜீவித்குமார் 664 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். அரசு பள்ளியில் படித்த மாணவர்களில், இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தவர் இவர்தான். இவருடைய தகப்பனார் ஆடு வளர்க்கும் தொழிலை செய்துவருகிறார். தாயார் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுகிறார்.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில்தான் படிக்கும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 3, 5, 6 என்ற மாணவர்கள் எண்ணிக்கையில் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேரமுடிந்தது. இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் தமிழை பாடமொழியாக கொண்டு படித்த 498 மாணவர்களும், ஆங்கிலத்தை பாடமொழியாக கொண்டு படித்த 249 மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது எல்லாமே தமிழ்நாட்டிற்கு பெருமை என்றாலும், தனியார் பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களால்தான் பெரும்பாலும் தேர்ச்சிபெற முடிகிறது என்பது சற்று மனக்குறையாக இருக்கிறது. அரசு பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார்கூட, ஆசிரியர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் நிதியுதவியால் 10 மாதமாக ஒரு பயிற்சி நிலையத்தில் படித்திருக்கிறார். ஆக, தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியும் மாணவர்களுக்கு தேவைப்படுகிறது என்றநிலையில், கல்வித்தரத்தை உயர்த்திய தமிழக அரசு “நீட்” தேர்வில் வெற்றிபெறும் அளவுக்கு தனிப்பயிற்சிகளையும் சிறப்பாக வழங்குவதில் கவனம் செலுத்தவேண்டும்.

இந்தநிலையில், அடுத்தகட்டமாக “நீட்” தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்புகள், தரவரிசை பட்டியல், மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவேண்டும். ஆனால், மொத்த மாணவர்களில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக 18-ந்தேதி அனுப்பப்பட்டு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை வழக்கறிஞர் இந்த மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளது என்றார். கவர்னரின் முடிவு தெரியும்வரை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆக, கவர்னரின் முடிவு எப்படி இருக்குமோ?, இடஒதுக்கீட்டிற்கு ஒத்துக்கொள்வாரா?, மாட்டாரா? என்ற குழப்பத்தில் மாணவர்களின் கண்கள் எல்லாம் கவர்னர் மாளிகையை நோக்கியே இருக்கிறது.

Next Story