மழை தண்ணீரோடு கலக்கும் விவசாயிகளின் கண்ணீர்!


மழை தண்ணீரோடு கலக்கும் விவசாயிகளின் கண்ணீர்!
x
தினத்தந்தி 19 Oct 2020 8:57 PM GMT (Updated: 2020-10-20T02:27:41+05:30)

இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியில் ஒரு பெரிய சாதனை தமிழ்நாட்டில் படைக்கப்பட்டுள்ளது என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், விளைச்சலில் சாதனை, விவசாயிக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்த உண்மை.

இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியில் ஒரு பெரிய சாதனை தமிழ்நாட்டில் படைக்கப்பட்டுள்ளது என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், விளைச்சலில் சாதனை, விவசாயிக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இடுபொருட்களின் விலையெல்லாம் உயர்ந்து, விவசாய செலவெல்லாம் அதிகரித்து, இயற்கை இடர்பாடுகளை தாண்டி நெல் விளைச்சலை கண்டுள்ள விவசாயிகள், தங்கள் உழைப்பின் பலனாக கிடைத்த நெல்லை வியாபாரிகளிடம் கொடுப்பதைவிட அரசின் நெல்கொள்முதல் நிலையங்களில் கொடுத்தால், சற்று லாபமாகவே இருக்கும் என்ற நோக்கத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை நாடி செல்கிறார்கள்.

ஏற்கனவே, சன்னரக நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதாரவிலையாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.1,888 விலையோடு, தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்கிய ரூ.70-ஐயும் சேர்த்து ரூ.1,958-க்கும், சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ள ரூ.1,868 விலையோடு, தமிழக அரசின் ஊக்கத்தொகையான ரூ.50-ஐயும் சேர்த்து ரூ.1,918-க்கும் வாங்கப்படுகிறது.

இந்த தொகை விவசாயிகளுக்கு “தொட்டுக்கோ... துடைத்துக்கோ...” என்ற அளவில்தான் இருக்கிறது. இன்னும் சற்று உயர்த்தினால், நன்றாக இருக்குமே என்ற ஒரு வேண்டுகோளும் விவசாயிகளின் மனதில் இருக்கிறது. ஆனால், தற்போது தங்கள் நெல்லை கிடங்கில் இருப்புவைத்து நல்லவிலை வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் காலம்வரை காத்திருக்கும் அளவுக்கு விவசாயிகளின் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. எனவே, வயலில் அறுவடை செய்தவுடன் களத்துமேட்டில் இருந்து அப்படியே அரசின் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்நிலை இருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள்தான் வாங்கமுடியும் என்ற உச்சவரம்பு இருந்தாலும், 600, 700 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே, கொண்டுவந்த நெல்லை வேறு எங்கும் கொண்டுபோய் பத்திரப்படுத்த முடியாத விவசாயிகள், கொள்முதல் நிலையங்களின் வாசலிலேயே கொட்டிவைத்து காத்திருக்கிறார்கள். இப்போது தஞ்சை மாவட்டத்தில் பலத்தமழை பெய்துவருவதால் நெல் குவியல்கள் நனைந்து, பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் நெல் முளைத்துவிடும் அபாயம் இருக்கிறது. மழை தண்ணீரோடு விவசாயிகளின் கண்ணீரும், நெல் மணிகளும் கலந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் ஈரமடைந்த நெல்லை கொள்முதல் நிலையங்களிலும் வாங்க மாட்டார்கள். வேறு என்னதான் செய்ய முடியும்?, இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? என்பது விவசாயிகளின் கேள்வி. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “அரசு நிர்ணயித்த வேலை நேரமான காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் நடந்தால் நிச்சயம் ஆயிரம் மூட்டைகள் நெல்லை கொள்முதல் செய்துவிடமுடியும். ஆனால், பணியாளர்கள் 11 மணி, 12 மணிக்குத்தான் வந்து வேலைகளை தொடங்குகிறார்கள். போதுமான அளவு சுமைதூக்கும் பணியாளர்களும் இல்லை. மேலும், அரசு பல மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்த சம்பா நெல், முன்பட்ட குறுவை என்று கூறப்படும் கோடைக்குறுவை நெல் மூட்டைகள் தற்காலிக கிடங்குகளிலும், நெல்கொள்முதல் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்போது செய்யப்படும் கொள்முதல் நெல்லுக்கு கிடங்குகளிலும், கொள்முதல் நிலையங்களிலும் இடமில்லை. விவசாயிகள் கொண்டுவரும் நெல் முழுமையையும் கொள்முதல் செய்து நேரடியாக அரவை மில்லுக்கு அனுப்புவதுதான் ஒரே தீர்வாகும்” என்று கூறுகிறார்.

விவசாயிகளின் துயரம் நீங்க வேண்டுமென்றால், இப்போது ஏற்பட்டுள்ள அபார விளைச்சலை கருத்தில்கொண்டு, ஏராளமான கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமித்து, 24 மணி நேரமும் கொள்முதல் செய்ய முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். நாட்கணக்கில் கொள்முதல் நிலையங்களின் வாசல்களில் நெல்லை போட்டு காத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தேவையான அளவு தார்ப்பாய்கள் வழங்க வேண்டும். இப்போது ஈரப்பதமான நெல்லுக்கும் சிறப்பு சலுகை கொடுத்து கொள்முதல் மிகவிரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story