கொரோனா கொடூரம் மளமளவென்று சரிகிறது!


கொரோனா கொடூரம் மளமளவென்று சரிகிறது!
x
தினத்தந்தி 20 Oct 2020 8:07 PM GMT (Updated: 2020-10-21T01:37:42+05:30)

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும், தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலும் தலையெடுத்த கொடிய கொரோனா உலகையே புரட்டிப்போட்டுவிட்டது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும், இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும், தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலும் தலையெடுத்த கொடிய கொரோனா உலகையே புரட்டிப்போட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கும், ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்களின் அன்றாட வாழ்வே சீர்குலைந்து, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. உற்பத்தி குறைவு, வர்த்தக வீழ்ச்சி, தனியார் நிறுவனங்களின் வருமானம் எல்லாம் பெரும்சரிவு, தனிநபர் வாங்கும் சக்தி குறைவு என்று எல்லாமே குறைந்து, ஒரு இருண்ட குகையில் நடப்பதுபோல இருந்தது. மத்திய அரசும், தமிழக அரசும் இதிலிருந்து மீண்டுவர வழி எங்கே இருக்கிறது? என்று தேடாமல், அவர்களே பாதையை உருவாக்கியதால் நல்ல பலன் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது. அப்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கும்மேல் இருந்த நிலையில், இப்போது 50 ஆயிரத்திற்கும்கீழ் குறைந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 46,790 ஆக இருந்தது. 3 மாதங்களுக்குப்பிறகு உயிரிழப்பும் 587 ஆக குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் 7-ந்தேதி தொடங்கியது. ஜூலை 27-ந்தேதி 6,993 என்று உச்சத்துக்கு சென்ற கொரோனா பாதிப்பு, கடந்த 12-ந்தேதி வரை தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்குமேல் என்ற எண்ணிக்கையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 4 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டது. நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 3,094 ஆக இருந்தது. உயிரிழப்பு குறைந்துகொண்டு இருக்கிறது. இவையெல்லாம் சற்று ஆறுதலை தந்தாலும், இதனால் மனநிறைவு அடைந்துகொள்ளக்கூடாது. இனிதான் மிகவும் விழிப்புடன் இருந்து கொரோனாவை முழுமையாக விரட்டியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மத்திய அரசாங்க அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நியமித்த 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு, தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருவதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மிகமிகக்குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. ஆனால், பண்டிகைக்கால பரவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மிக முக்கியமான நடவடிக்கையாக கூறியுள்ளது. ஏனெனில், கேரளாவில் தொடக்கத்தில் இருந்தே எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கைகளால் கொரோனா பெரும் கட்டுப்பாட்டில் இருந்தது. செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் கேரளாவில் 2.9 சதவீதம் என்று இருந்த நிலையில், இப்போது 10 சதவீதமாகி விட்டது. இதற்கு காரணம், ஓணம் பண்டிகையின்போது மக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காததால் தான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்காளத்திலும் துர்கா பூஜை விழா பந்தல்களில் மக்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அடுத்து தொடர்ந்து நவராத்திரி, ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, கார்த்திகை திருநாள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருநாள் என்று பண்டிகை வரும் காலம் இது. இந்த பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது நடந்த கொரோனா பரவல் நடந்துவிடக்கூடாது என்பது மக்களின் விழிப்புணர்வில் தான் இருக்கிறது. பண்டிகைகளை இந்த ஆண்டு முககவசம், சமூகஇடைவெளியோடு கொண்டாடுவோம். வீட்டில் இருப்போம், தனித்து இருப்போம், வழிபாட்டு தலங்களில், தெருக்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்போம் என்பதையே தாரக மந்திரமாக மக்கள் மனதில் கொண்டு முதலில் கொரோனாவை முழுமையாக ஒழிப்போம்.

அடுத்த ஆண்டு நம் பண்டிகைகளை, இந்த ஆண்டுக்கும் சேர்த்து கோலாகலமாக கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டால், கொரோனாவை விரட்டிவிடலாம்.

Next Story