வீர காவலர்களுக்கு வீர அஞ்சலி!


வீர காவலர்களுக்கு வீர அஞ்சலி!
x
தினத்தந்தி 21 Oct 2020 9:22 PM GMT (Updated: 21 Oct 2020 9:22 PM GMT)

போலீஸ் பணி என்பது மிக உன்னதமான பணி. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதற்கும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் போலீசாரின் சிறப்பான பணிதான் பெரும் பங்கு வகிக்கிறது.

போலீஸ் பணி என்பது மிக உன்னதமான பணி. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதற்கும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் போலீசாரின் சிறப்பான பணிதான் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான் மறைந்த போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால், எப்போதுமே இரவு ரோந்து செல்லும் போலீசாரிடம், “மக்கள் எந்தவித கவலையுமின்றி, அச்சமுமின்றி நிம்மதியாக வீடுகளில் தூங்கவேண்டுமென்றால், நீங்கள் இரவு சாலைகளில் விழிப்புடன் ரோந்து செல்லவேண்டும். உங்கள் விழிப்பில்தான் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்ட அச்சமடைந்து ஓடிவிடுவார்கள்” என்பார். அப்படிப்பட்ட மிக சீரிய பணியான போலீஸ் பணியில் பல நேரங்களில் போலீசார் வீரமரணம் அடைவதுண்டு. அவர்களையெல்லாம் நினைத்து வீர அஞ்சலி செலுத்தவேண்டிய கடமை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. காவல் பணியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி வீரவணக்கநாள் அனுசரிக்கப்படுகிறது.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்கிய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நினைவு சின்ன பீடத்தில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக காவல்துறையில் 1950-ம் ஆண்டு முதல் இன்னுயிரை ஈந்த போலீசார் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் என்று மொத்தம் 151 காவலர்களின் பெயர், பணிபுரிந்த காவல்நிலையம், வீரமரணம் அடைந்த நாள் மற்றும் அவர்களுடைய திருஉருவம் ஆகியவற்றை குறிப்பிடும் நினைவுக்கல்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நினைவுக்கல்லில் வேலூர் மாவட்டத்தில் 6.8.1980 அன்று நக்சலைட்டுகளை கைது செய்து காரில் அழைத்துவரும்போது, அவர்களில் ஒருவன் மடியில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் வீரமரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் வி.பழனிசாமி மற்றும் போலீசார் ஆர்.ஏசுதாஸ், சி.முருகேசன் ஆகியோர் பெயர்களும், 21.05.1991 அன்று ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் யு.ராஜகுரு, எட்வர்டு ஜோசப், பெண் போலீஸ் சந்திரா, போலீஸ்காரர்கள் ஜெ.தர்மன், ஆர்.ரவி, எஸ்.முருகன் ஆகியோர் பெயர்களும் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்தால் மெய்சிலிர்க்கிறது.

நினைவுக்கல்லில் வீரமரணம் அடைந்த வீரக்காவலர்களின் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழில் இல்லையே? என்ற குறை இருக்கிறது. மேலும், அவர்கள் என்ன வீரதீரச்செயலில் ஈடுபடும்போது வீரமரணம் அடைந்தார்கள் என்ற குறிப்பும் ஒருசில வார்த்தைகளில் மட்டும்தான் இருக்கிறது. நினைவுக்கல்லில் இதையெல்லாம் முழுமையாக தெரிவிக்க முடியாது. சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்படுகிறது. போலீஸ் டி.ஜி.பி. அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் தாராளமாக போய்வர முடியாது என்பதால், அருங்காட்சியகத்தில் இவ்வாறு வீரமரணம் அடைந்த ஒவ்வொருவரின் புகைப்படங்களையும், அவர்களை பற்றிய விவரங்களையும் முழுமையான அளவில் குறிப்பிட்டால், இன்றைய சந்ததியினரும், எதிர்கால சந்ததியினரும் நமக்காக உயிர்நீத்த இந்த வீரக்காவலர்களின் நினைவைப்போற்றி வணங்க ஏதுவாக இருக்கும். அவர்களின் வீரச்செயல்கள் எல்லாம் பொதுமக்கள் நினைவில் இருந்து மங்கிவிடாமல், மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால், அவர்களுக்கு தமிழக மக்கள் வீரவணக்கம் செலுத்த வேண்டுமென்றால், இந்த விவரங்கள் எல்லாம் தமிழில் தெரிவிக்கப்பட வேண்டும். தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினருக்கும், தமிழக காவல்துறையினரின் வீரத்தீர செயல் புரியும்வகையில் ஆங்கிலத்திலும் குறிப்பிட வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story