ஆண்டுதோறும் கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!


ஆண்டுதோறும் கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!
x
தினத்தந்தி 22 Oct 2020 9:36 PM GMT (Updated: 22 Oct 2020 9:36 PM GMT)

தந்தை பெரியார் எப்போதும், தன் பேச்சின் இடையே வெங்காயம் என்று குறிப்பிடுவார். எப்படி உரிக்க.. உரிக்க.. வெங்காயம் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்குமோ, அதுபோல முடிவில்லாத பிரச்சினையை வெங்காயம் என்பார்.

தந்தை பெரியார் எப்போதும், தன் பேச்சின் இடையே வெங்காயம் என்று குறிப்பிடுவார். எப்படி உரிக்க.. உரிக்க.. வெங்காயம் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்குமோ, அதுபோல முடிவில்லாத பிரச்சினையை வெங்காயம் என்பார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று டுவிட்டரில், “பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும், இனி சமையலில் அதை வையார். விலை இறங்குவாயா வெங்காயமே?” என்று பதிவிட்டுள்ளார்.

சமையல் அறையில் இல்லத்தரசிகள் வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையை கேட்டால், குடும்ப தலைவர்களுக்கு கண்ணீர் வருகிறது. வெங்காயத்தின் விலை, ஆண்டுதோறும் இந்த காலக்கட்டங்களில் உயர்ந்துகொண்டே இருக்கிறது. காயங்களுக்கு அவ்வப்போது முதலுதவி செய்வதுபோல, வெங்காய விலை உயர்வு நேரங்களில் மட்டும், ஏதோ சில உடனடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கிறதே தவிர, நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தற்போது, வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான மராட்டியம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் பெய்யும் பெரு மழையால் வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டு ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. வெங்காயம் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. வெங்காயத்தை கடித்துக்கொண்டே கஞ்சி குடிக்கும் ஏழை, எளிய மக்களும் உண்டு. எனவே, வெங்காய சப்ளையை சீராக்க எகிப்து, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மத்திய அரசாங்கம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வெங்காயங்களின் ருசி நம் நாட்டு வெங்காய ருசிக்கு ஈடாக முடியாது என்பதால், பெண்களின் பார்வை அதன் பக்கம்போக சற்று தயங்குகிறது.

தற்போது, பெரிய வெங்காயம் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இந்த ஆண்டுதான் வெங்காய தட்டுப்பாடு இருக்கும், விலை உயர்வு இருக்கும், அடுத்த ஆண்டு முதல் நிச்சயமாக தட்டுப்பாடு இருக்காது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை கூறுகிறார், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன்.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மட்டுமே பெரிய வெங்காயமும், பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சின்ன வெங்காயமும் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள ஏற்ற வகையில், வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிக்க ஒரு சிறப்பு திட்டத்தை தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வகுத்து விவசாயிகளுக்கு அதற்கேற்ற விதைகள், சாகுபடிக்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் வெளிமாநிலங்களில் இருந்து விதைகளை வரவழைத்த நிலைக்கு மாறாக, இப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக்கலைத்துறை பண்ணைகளிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர், ஜனவரி மாதத்தில் இருந்து நமக்கு விளைச்சல் வந்துவிடும். அடுத்த ஆண்டு வெளிமாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளும் வெங்காய சாகுபடிக்கு அரசு வழங்கும் உதவிகளை பயன்படுத்தி வெங்காயம் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். அடுத்த ஆண்டு வெங்காய பற்றாக்குறை ஏற்படாது என்பது சரிதான். ஆனால், தற்போது வெங்காய விலை உயர்வில் இருந்து மக்கள் படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற சென்னை உள்ளிட்ட 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும், நகரும் கடைகள் மூலமாகவும், பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.45-க்கு விற்க அரசு நடவடிக்கை எடுத்ததுபோல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளபடி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.45-க்கு விற்றால் நிலைமையை சமாளித்துவிடலாம் என்பதே இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story