இலவச கொரோனா தடுப்பூசிக்கு போட்டா போட்டி!


இலவச கொரோனா தடுப்பூசிக்கு போட்டா போட்டி!
x
தினத்தந்தி 23 Oct 2020 8:59 PM GMT (Updated: 23 Oct 2020 8:59 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எல்லாமே இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எல்லாமே இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது. சீனாவில், 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டோம், யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை என்று சொன்னாலும், அதனால் உலகத்துக்கு என்ன பலன்? என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்?, எப்போது பயன்பாட்டிற்கு வரும்?, அதன் விலை எவ்வளவாக இருக்கும்? என்று இதுவரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில் முதல் வாக்குறுதியே, கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன், பீகார் மாநிலத்தில் எல்லோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு மட்டும் என்ற இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியது. அந்த அலை ஓய்வதற்கு முன்பு ஒரு சில மணித்துளிகளில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நோய் குணமடைய தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்க செலவிலேயே போடப்படும்” என்று அறிவித்தார். அடுத்து, கர்நாடக மாநிலத்தில் அனைவருக்கும் என்றும், மத்திய பிரதேசத்தில் ஏழைகளுக்கு என்றும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாநிலமாக இதை அறிவிக்கத் தொடங்கும்.

ஏற்கனவே, மத்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் அறிவித்த நேரத்தில், மத்திய அரசாங்கமே இந்த தடுப்பூசி மருந்தை இலவசமாக போடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது, “மத்திய அரசாங்கம், இதை மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கும். அதை இலவசமாக கொடுப்பதா?, இல்லையா? என்பதை மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, எவ்வாறு இந்த தடுப்பூசி மருந்தை முதல் கட்டமாக நாடு முழுவதும் 30 கோடி பேர்களுக்கு போடுவது? என்ற ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுத்துள்ளது. அதன்படி, 4 இனங்கள் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதலாவதாக, கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 70 லட்சம் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், அடுத்து காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் போன்ற முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 2 கோடி பேர்களுக்கும், அடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி குடிமக்களுக்கும், அடுத்து நீரிழிவுநோய், ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் உள்ள 50 வயதுக்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என ஒரு செயல் திட்டத்தை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டிலும் இப்போது மக்கள்தொகை 8 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் போடமுடியாது. இப்போதே முன்னுரிமை பட்டியலை தயாரிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், தடுப்பூசிகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல குளிர்சாதன பெட்டிகள், போக்குவரத்து வசதிகள் கண்டிப்பாக வேண்டும். இந்த தடுப்பூசி மருந்து மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் தான் வைக்கப்பட வேண்டும். எனவே, முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை இப்போதே வகுக்கத் தொடங்கினால் தான் குறுகிய காலக்கட்டங்களில் தடுப்பூசி மருந்தை போட்டு முடிக்க முடியும்.

Next Story