யானை ஒரு ஜென்டில்மேன்; அதற்கு வழிவிடுங்கள்!


யானை ஒரு ஜென்டில்மேன்; அதற்கு வழிவிடுங்கள்!
x
தினத்தந்தி 26 Oct 2020 9:30 PM GMT (Updated: 2020-10-26T22:29:45+05:30)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, “யானை ஒரு ஜென்டில்மேன்; அதற்கு மனிதன் வழிவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பது, சிறப்பு வாய்ந்த வரிகளாகும்.

யானைகளின் வழித்தடம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, “யானை ஒரு ஜென்டில்மேன்; அதற்கு மனிதன் வழிவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பது, சிறப்பு வாய்ந்த வரிகளாகும். “இயற்கையின் தலைசிறந்த படைப்பு யானை. பார்க்க.. பார்க்க.. அலுக்காத உயிரினம் யானை” என்றார், ஆங்கில கவிஞர் ஜான் டோன்.

நீலகிரி மலையில் ஆய்வுகளை நடத்திய மானுடவியலாளர் நூரிட் பேட் டேவிட், “மனிதர்கள் அல்லாத காட்டு குடிமக்கள் யானைகள். அதற்கு உரிய மரியாதையை கொடுத்தால் மக்கள் வழியில் குறுக்கிடுவதில்லை” என்று கூறினார். யானையின் வாழ்க்கை முறை மிக வித்தியாசமானது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி உயிர்க்கோள வனச்சரகம். இந்த பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன.

பொதுவாக யானைகள் ஒரே இடத்தில் வாழ்வதில்லை. எங்கு தண்ணீர் இருக்கிறதோ, எங்கு பசுமையான இலை - தழைகள் இருக்கின்றனவோ, அவற்றை தேடி கூட்டம் கூட்டமாக செல்லும். அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் உணவையும், தண்ணீரையும் தேடி அலையும் யானைகள், அங்கு மழைக்காலம் முடிந்து கோடை வந்தவுடன், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி செல்லும். யானைகள் இவ்வாறு செல்லும்போது, ஒரே வழித்தடத்தில்தான் செல்லும். ஆண்டுகள் கடந்தாலும் அதன் பாதை மாறாது. இதை யானை வழித்தடம் என்று அழைப்பார்கள். தன் பாதையில் ஏதாவது குறுக்கிட்டால், அதை சுற்றிப்போய் மீண்டும் தனது பழைய பாதையை தொடர அதற்கு தெரியாது.

தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில், மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களை இணைப்பது சிகுர் பீடபூமி வழித்தடமாகும். இதன் தென்மேற்கில் நீலகிரி மலைகளும், வடகிழக்கில் மாயாறு ஆற்றுப்பள்ளத்தாக்கும் உள்ளது. இந்த வழித்தடத்தில் பல விடுதிகள், உணவகங்கள், கட்டிடங்கள் கட்டப்பட்டதால் யானைகள் இந்த வழித்தடத்தில் செல்ல முடியாமல், சுற்றிச்செல்வதற்கும் அதற்கு மாற்று வழிதெரியாமல், பாதைமாறி கீழே இறங்கி மக்கள் வாழ்விடங்களுக்கு சென்றுவிடுகின்றன. இதனால், யானைகளுக்கும் தொல்லை, மக்களுக்கும் தொல்லை. எனவே, யானை வழித்தடத்திலுள்ள கட்டிடங்களை எல்லாம் அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் யானை ராஜேந்திரன் 2009-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், இந்த வழித்தடத்திலுள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்ற சென்னை ஐகோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசும் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்பட விடுதிகள், தனியார் நில உரிமையாளர்கள் 32 மேல்முறையீடுகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தபிறகு, இப்போது இந்த கட்டிடங்களை எல்லாம் அகற்ற வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து யானை வழித்தடத்திலுள்ள 39 விடுதிகளுக்கு சொந்தமான 309 கட்டிடங்கள், இப்போது இடிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அவர்களுடைய குறைகளை தெரிவிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்குழுவிடம் தங்கள் புகார்களை, முறையீடுகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடத்தில் எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தங்கள் சொந்த நிலங்களில் கட்டிடங்களை எழுப்பியவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து, இதனால் வேலை இழந்தவர்களுக்கும் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் இந்த கட்டிடங்களை கட்ட அரசின் பல்வேறு துறைகள் தானே அனுமதி கொடுத்தது, மின்சார வசதி உள்பட பல வசதிகளை வழங்கியது என்ற வகையில், அரசு தானே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தகுந்த இழப்பீடுகளை வழங்கி யானை வழித்தடத்தை மீட்டெடுக்கலாம்.

Next Story