வழிகாட்டும் அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவு


வழிகாட்டும் அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவு
x
தினத்தந்தி 27 Oct 2020 11:01 PM GMT (Updated: 2020-10-28T04:31:47+05:30)

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகி நாட்கள் பல கடந்துவிட்டன. இன்னும் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் முடியப்போகிறது.

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகி நாட்கள் பல கடந்துவிட்டன. இன்னும் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் முடியப்போகிறது. இனி எப்போது மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முடியும் என்ற கவலை மாணவர் உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசு பள்ளிக்கூட மாணவர்களால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. அவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. இதன்காரணமாக, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது. எந்த மசோதாவும் சட்டமாக வேண்டுமென்றால், கவர்னரின் ஒப்புதலை பெறவேண்டும் என்ற நிலையில், கடந்த மாதம் 18-ந்தேதி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. 41 நாட்களாகி விட்டன. இன்னமும் கவர்னரின் ஒப்புதல் வரவில்லை.

ஏற்கனவே கடந்த 5-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்து விரைவில் ஒப்புதல் வழங்கக்கோரி வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அமைச்சர்களும் சந்தித்தனர். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த 21-ந்தேதி கடிதம் எழுதினார். அவருக்கு, கவர்னர் மறுநாளே (22-ந்தேதி) பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். சட்டரீதியான ஆலோசனைகளை பெறவேண்டியிருப்பதால் 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முன்பு கடந்த 24-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டது. நேற்று தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். ஆக, கவர்னரின் பதில் இன்னும் கிடைக்காத நிலையில், என்ன பதில் அனுப்புவாரோ?, எப்போது அனுப்புவாரோ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே பெரிதும் இருக்கிறது. இதுகுறித்து அரசியல் சட்டநிபுணர்களிடம் கேட்டபோது, மசோதாக்களுக்கு பதிலளிக்க கவர்னருக்கு வழிகாட்ட அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவு இருக்கிறது. அந்த பிரிவின்படி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கலாம். அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு வைத்திருக்கலாம். அல்லது சில ஆலோசனைகளை கூறி மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பலாம். அவர் திருப்பி அனுப்பும்பட்சத்தில், அவருடைய பரிந்துரையின்படியோ அல்லது இல்லாமலோ, சட்டசபையில் மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றலாம். அப்படி திருப்பி அனுப்பப்படும் நேரத்தில் கவர்னரால் ஒப்புதல் அளிக்காமல் அதை நிறுத்திவைக்க முடியாது. வேண்டுமானால், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாம். இதைத்தான் அரசியல் சட்டம் கூறுகிறது.

ஆக, இந்த 4 வழிகளும் கவர்னர் முன்பு இருக்கிறது. இந்த 4 வழிகளில் ஒரு வழியைத்தான் கவர்னர் பின்பற்றுவார். அரசியல் சட்டத்தில் இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்திலும் 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்திருப்பதால், அதற்குள் அவரிடம் இருந்து பதில் வந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால், கவர்னர் பதில் தருகிறேன் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, ஒப்புதல் தருவதாக கூறவில்லை. ஒப்புதல் தருவதாக இருந்தால், இவ்வளவு நாட்களுக்குள் நிச்சயமாக தந்திருக்கலாம். ஆக, மீதமுள்ள 3 இனங்களில் ஒன்றைத்தான் அவர் பதிலாக அனுப்புவார் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. கவர்னர் ஒப்புதல் தந்தால்தான் உடனடியாக கவுன்சிலிங்கை தொடங்க முடியுமே தவிர, ஒப்புதல் அளிக்காமல் மற்ற எந்த முடிவுகளை எடுத்தாலும், உடனடியாக கவுன்சிலிங்கை தொடங்க முடியாது என்பதால் நிச்சயமாக அது சிக்கலைத்தான் ஏற்படுத்தும். 

Next Story