காய்கறிக்கு குறைந்தபட்ச விலை!


காய்கறிக்கு குறைந்தபட்ச விலை!
x
தினத்தந்தி 28 Oct 2020 9:30 PM GMT (Updated: 28 Oct 2020 5:00 PM GMT)

கேரள மாநிலம் தோன்றிய நாள் நவம்பர்-1. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு உதவும் ஒரு நல்ல திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த நாள் முதல் அமல்படுத்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பின்பற்ற வேண்டிய ஒரு நல்ல திட்டத்தை கேரளா வழிகாட்டிவிட்டது. மத்திய அரசாங்கம் அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு உள்பட 7 தானிய வகைகளுக்கும், 5 பருப்பு வகைகளுக்கும், 8 எண்ணெய் வித்துகளுக்கும் மற்றும் கொப்பரை தேங்காய், கரும்புக்கும் என மொத்தம் 22 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளது. நெல்லுக்கு மத்திய அரசாங்கம் கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட, தமிழக அரசு கூடுதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. விவசாயிகள் எல்லோருமே நெல், வாழை பயிரிடுவதில் மட்டும் காட்டும் அக்கறையை சுழற்சி முறையில் மற்ற விளைபொருட்களையும் பயிரிட ஆர்வம் காட்டவேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு இருக்கக்கூடாது என்பதால், தோட்டக்கலைதுறை 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தை, இப்போது 1½ லட்சம் ஏக்கரில் பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. காய்கறியை பொறுத்தமட்டில், 5 லட்சம் ஏக்கரில் பயிரிட்ட நிலையில் இருந்து மாறி, இப்போது 9 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கும், பெங்களூருவுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது. உருளைக்கிழங்கு போன்ற ஒருசில காய்கறி மட்டும் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கவேண்டிய நிலை இருக்கிறது. தமிழக விவசாயிகள் காய்கறி பயிரிட தயாராக இருக்கிறார்கள். இன்னும் நிறைய பயிரிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், நமக்கு நியாயமான விலை கிடைக்குமா? என்ற அச்சத்திலும், இது அழுகும் பொருள், ரொம்பநாள் வைத்து விற்க முடியாது, கேட்ட விலைக்கு கொடுக்கவேண்டுமே? என்ற பயத்திலும் காய்கறி பயிரிட தயக்கம் இருக்கிறது. தற்போது வெள்ளைப்பூண்டு, அன்னாசி பழம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ், நேந்திரம் பழம், தக்காளி, கேரட், பாகற்காய், புடலங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், மரச்சீனி கிழங்கு, பட்டாணி, பூசணிக்காய் ஆகிய 16 காய்கறி, பழங்களுக்கு குறைந்தபட்ச விலையை கேரள அரசு நிர்ணயித்துள்ளது. 15 ஏக்கருக்கு குறைவாக பயிரிடும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவோடு, 20 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் வகையில் அரசே கொள்முதல் செய்வதற்காக இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் இதைவிட கூடுதலாக விற்றால் அங்கேயே விவசாயிகள் விற்றுவிடுவார்கள். இதைவிட குறைந்த விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்றால் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலைக்கு வேளாண்துறையை சேர்ந்த 300 விற்பனை நிலையங்களிலும், தொடக்க வேளாண் சங்கங்களில் உள்ள 250 விற்பனை முனையங்களிலும் விற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்புகளும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல், விற்பனை செய்வதற்கு ஒருங்கிணைந்து செயல்படும்.

இந்தத் திட்டம் நவம்பர் 1-ந் தேதிதான் அமலுக்கு வருகிறது என்றாலும், வாழைப்பழம் கொள்முதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சந்தை விலை கிலோ ரூ.12 முதல் ரூ.17 வரை சரிந்த நிலையில், குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.24-க்கு வயநாட்டில் கொள்முதல் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலும் இதுபோல காய்கறி, பழங்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயித்தால் இங்கு இருக்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் கொள்முதல் செய்ய முடியும். விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும். காய்கறிக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தால், சுழற்சி முறையில் காய்கறி பயிரிடவும், தரிசு நிலங்களில் பயிரிடவும் விவசாயிகள் பெரும் அளவில் முன்வருவார்கள் என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.

Next Story