காற்று மாசு மிகுந்த நாடா இந்தியா?


காற்று மாசு மிகுந்த நாடா இந்தியா?
x
தினத்தந்தி 29 Oct 2020 9:30 PM GMT (Updated: 2020-10-29T23:25:16+05:30)

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் நேருக்குநேர் பங்குபெறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது.

அடுத்த சில நாட்களில், அதாவது நவம்பர் 3-ந்தேதி அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்?, தற்போது ஜனாதிபதியாக இருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பா? ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா? என்று உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு துணையாக, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ் தமிழ்நாட்டு வம்சாவழியை சேர்ந்தவர் என்பதால், ஜெயிக்கப்போவது யார்? என்பதில் தமிழக மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. அங்கு கடைசியாக நடந்த ஒரு கணிப்பில், அமெரிக்காவில் வாழும் 19 லட்சம் இந்திய அமெரிக்க வாக்காளர்களில் 72 சதவீதம் பேர் ஜோ பைடனுக்கும், 22 சதவீதம் பேர் டிரம்புக்கும் வாக்களிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், மிச்சிகன், டெக்சாஸ் போன்ற ஒருசில மாநிலங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது இந்திய வம்சாவளியினரின் வாக்குகள்தான். இந்த கணிப்புக்கு பிறகு, தனது கருத்தை டிரம்ப் நேருக்குநேர் வாதாடும் நிகழ்ச்சியில், வெளிகாட்டி இருக்கிறார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் நேருக்குநேர் பங்குபெறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது. கடந்த பல தேர்தல்களில் இந்த நேருக்குநேர் விவாதங்கள்தான் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரும் ஆதரவை திரட்டித்தந்துள்ளது. தற்போது டிரம்புக்கும், பைடனுக்கும் இடையே கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு இறுதிச்சுற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இருவருமே காரசாரமாக பேசினர். டிரம்ப் பேசும்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளை கூறினார். பாரீஸ் ஒப்பந்தத்தைவிட்டு எதற்காக வெளியேற முடிவெடுத்தேன் என்று சொல்லும்போது, “அது இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு ஓரவஞ்சனையாக இருக்கிறது. இந்த நாடுகள்தான் சுற்றுச்சுழலை மிகவும் பாதிக்கின்றன. சீனாவை பாருங்கள், எவ்வளவு அழுக்கடைந்த நாடாக இருக்கிறது. ரஷ்யாவை பாருங்கள். இந்தியாவை பாருங்கள், மிகவும் அழுக்கடைந்த நாடாக இருக்கிறது. காற்றுமாசு மிக மோசமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது, இந்தியாவை இப்போது சிந்திக்க வைக்கிறது.

இந்தியாவில் காற்றுமாசு இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. உண்மையான நண்பனுக்கு அழகு, குறைகளை சுட்டிக்காட்டுவதுதான். நட்பு நாடு என்ற முறையில் அந்த குறையை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை கூறுவதுதான் உண்மையான நண்பருக்கு அடையாளம். அந்த வகையில்தான், டிரம்ப் கூறிய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டிரம்ப் கூறிய இந்த கருத்துக்கு ஜோ பைடன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவை அழுக்கடைந்த நாடு என்று கூறியிருக்கிறார். நண்பர்களை பற்றி இவ்வாறு பேசுவது சரியல்ல’ என்று பதிவிட்டுள்ளார். டிரம்ப் பகிரங்கமாக குறைகூறிய காற்றுமாசு இந்தியாவில் மக்கள் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 16 லட்சத்து 70 ஆயிரம் பேர் காற்று மாசினால் உயிரிழந்திருக்கிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாதான் உலகிலேயே காற்று மாசுள்ள நாடுகளில் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லியை அடுத்த காசியாபாத்தான் உலகிலேயே அதிக மாசுள்ள நகரம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் காற்றுமாசின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, டிரம்ப் இவ்வாறு இந்தியாவிலுள்ள காற்றுமாசை குறைகூறும் அளவுக்கு நம் நிலைமை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக காற்றுமாசுக்கு முக்கிய காரணங்களான பிஎம் என்று அளவிடப்படும் புகை மாசு, தூசி மற்றும் தரைமட்ட ஓசோன், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவற்றை காற்றில் குறைப்பதற்கான முழு முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே, சுத்தமான காற்று, சுகமான வாழ்வை விரும்புபவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story