அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைத்த இரட்டை வெற்றி!


அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைத்த இரட்டை வெற்றி!
x
தினத்தந்தி 30 Oct 2020 9:30 PM GMT (Updated: 2020-10-30T22:43:43+05:30)

தமிழ்நாட்டில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் தான் படிக்கிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அடிக்கடி கட்சித்தலைவர்களிடம் பேசும்போது, “நீங்கள் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல் முட்டுக்கட்டையாக இருந்தால், அதிலேயே நின்றுகொண்டு என்ன செய்வது? என்று விழித்துக்கொண்டு நிற்காதீர்கள். பக்கத்தில் ஏதாவது சுற்றுவழி இருக்கும். அதில் சென்று உங்கள் பயணத்தை தொடருங்கள்” என்று அவருடைய பாணியில் கூறுவார். அதே ஆலோசனையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போது எடுத்தது நிச்சயமாக பாராட்டுக்குரியது. அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை நேற்று முன்தினம் வெளியிட்டது முதல் வெற்றியாகும். சட்டசபையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 43 நாட்களுக்குப் பிறகு கவர்னர் ஒப்புதல் கொடுத்திருப்பது மற்றொரு வெற்றியாகும். ஆக, மாணவர்களுக்கு இது இரட்டை வெற்றியாகும்.

தமிழ்நாட்டில் 41 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் தான் படிக்கிறார்கள். ஆனால், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிக்கூட மாணவர்கள் பெறும் இடம் 0.14 சதவீதம் தான். ஆண்டுதோறும் 5, 6, 8 இடங்கள் தான் மாணவர்களுக்கு கிடைத்துவந்தது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிர்காலத்தில் டாக்டராகலாம் என்பது எட்டாக்கனியாக இருந்தது. அந்த குறையெல்லாம் இப்போது நீங்கிவிட்டது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்கும் கொள்கைமுடிவை 21-3-2020 அன்று சட்டசபையில் அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து அவரது பரிந்துரையை பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஏகமனதாக 15-9-2020 அன்று நிறைவேற்ற வழிவகை செய்தார். 18-ந்தேதி அந்த மசோதா ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 5 அமைச்சர்கள் அடுத்தடுத்து கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந்தேதி கவர்னருக்கு எழுதிய கடிதத்துக்கு உடனடியாக கவர்னர் 22-ந்தேதி அளித்த பதிலில், “தன் பரிசீலனை முடிய 3 அல்லது 4 வாரங்கள் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்துக்கட்சி தலைவர்களும் கவர்னர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அரசு பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மனசாட்சிப்படி கவர்னர் விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புவதாக கூறினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரசியல் சட்டம் 162-வது பிரிவின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நிர்வாக அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதுபோன்ற இடஒதுக்கீட்டை நிர்வாக உத்தரவின் மூலம் வழங்கலாம் என்று கடந்த காலங்களில் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது. இருந்தாலும், சட்டமாக வந்தால் சட்டப்பூர்வமாக பாதுகாப்பு இருக்குமே என்று எல்லோருடைய மனதிலும் ஏக்கம் இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், நேற்று காலை கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், கவர்னர் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்ற மகிழ்ச்சியான தகவல் வந்தது. தமிழக அரசின் மசோதா குறித்து இந்திய சொலிசிட்டர் ஜெனரலிடம் கவர்னர் கருத்துகேட்டு 26-9-2020 அன்று அனுப்பப்பட்ட கடிதத்துக்கு 29-10-2020 அன்று அவர் பதில் அளித்த தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சொலிசிட்டர் ஜெனரல் எழுதிய கடிதத்தில், “இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு ஏற்புடைய வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருப்பது பெரிய பலத்தை கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருங்கே எடுத்த முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.

Next Story