221 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இயல்புநிலை!


221 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இயல்புநிலை!
x
தினத்தந்தி 1 Nov 2020 9:30 PM GMT (Updated: 2020-11-01T22:56:55+05:30)

உலகம் முழுவதையும் தலைகீழாக புரட்டிப்போட்ட கொரோனா, தமிழ்நாட்டில் தன் கோரப்பிடியை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

பரவல் அதிகம் ஆகாமல் இருக்க முதல்கட்டமாக மார்ச் 25-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக நீட்டிக்கப்பட்டு 9-வது கட்டம் 221 நாட்களோடு அக்டோபர் 31-ந்தேதியுடன் முடிந்தது. 10-வது கட்டம் மீண்டும் நிறைய தளர்வுகளுடன் இப்போது தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரநிலை மீண்டெழுந்ததற்கு பல சான்றுகள் வந்துள்ளன. இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் கிராம பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட இந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசின் வரி வருவாய் 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்திரப்பதிவு மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி ஒரே நாளில் 20 ஆயிரத்து 307 பத்திரங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு ரூ.123 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 589 முத்திரைத்தாள் கட்டணமாகவும், பதிவு கட்டணமாகவும், மற்ற கட்டணங்கள் மூலமாகவும் வருவாய் கிடைத்துள்ளது.

கொரோனா பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டநிலையில், அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் 100 பேருக்கு பரிசோதனை நடத்தினால் 7.8 சதவீத பேருக்கு தொற்று என்றநிலைமாறி, அக்டோபர் மாதத்தில் 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்களும் செப்டம்பர் மாதத்தில் 70 நாட்களாக இருந்தநிலைமாறி தற்போது 224 நாட்களாக உயர்ந்துள்ளது. கடந்த 31-ந்தேதி கணக்குபடி 22 ஆயிரத்து 164 பேர்கள்தான் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கையும் அக்டோபர் மாதத்தில் 1.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. குணமடைந்தவர்கள் சதவீதம் 95.4 ஆக உயர்ந்துவிட்டது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு தமிழ்நாடு இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்வேளையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த மாதம் 10-ந்தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், 16-ந்தேதி முதல் அனைத்துக் கல்லூரிகளையும், 9 முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கூட வகுப்புகளையும் திறக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையில் புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப இயக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் பல நாடுகளில் நன்றாக குறைந்த கொரோனா பாதிப்பு, தளர்வுகளின்போது சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 2-வது அலை பரவ தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தநிலை தமிழ்நாட்டுக்கு வராமலிருக்க, இப்படியே கொரோனா பாதிப்பை குறைத்து ஒழித்துவிடவேண்டும் என்றால் அது மக்கள் கையிலும், அரசுத்துறைகள் கையிலும்தான் இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 30 சதவீத மக்கள் முககவசம் அணியாமல் இருக்கிறார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. சென்னையில் 50 சதவீதம் பேர் முககவசம் அணிவதில்லை என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அபாயசங்கை ஊதிவிட்டார்.

கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தொடர்ந்து கண்காணித்து, தொற்று பரவாத வண்ணம் முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க ஒலிப்பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திடவேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார். இதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இதை எல்லோரும் கடைபிடிக்க அரசும் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கையாக இருக்கிறது.

Next Story