ஜெயிக்கப்போவது யார்?; யானையா...? கழுதையா...?


ஜெயிக்கப்போவது யார்?; யானையா...? கழுதையா...?
x
தினத்தந்தி 2 Nov 2020 9:30 PM GMT (Updated: 2020-11-02T23:59:09+05:30)

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? என்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

அந்த நாட்டில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரட்டைப்படை எண் கொண்ட ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அதுவும், நவம்பர் மாதம் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்த செவ்வாய்கிழமைதான் நடக்கும்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல அரசியல் ஒற்றுமைகள் இருக்கின்றன. நமக்கு மக்களவைபோல அங்கே பிரதிநிதிகள் அவை (ஹவுஸ் ஆப் ரெப்ரசன்டேடிவ்ஸ்), நமக்கு மாநிலங்களவை இருப்பதுபோல அங்கே செனட் இருக்கிறது. பிரதிநிதிகள் அவைக்கு 50 மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 435 உறுப்பினர்கள் உண்டு. செனட்டில் மொத்தம் உள்ள 100 உறுப்பினர்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு தேர்தல் நடக்கும்.

இன்று 3-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, செனட்டுக்கான 35 இடங்கள், பிரதிநிதிகள் அவைக்கான 435 இடங்கள் மற்றும் 11 மாகாணங்களுக்கு கவர்னர்களை தேர்ந்தெடுக்க இறுதித்தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சியின் தேர்தல் சின்னம் யானை, ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னம் கழுதை. ஜனாதிபதி பதவிக்கு, வலதுசாரி தத்துவங்களை முன்னெடுக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப். மிதவாத கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவியை ஏற்கனவே இருமுறை வகித்த ஜோ பைடன் போட்டியிடுகிறார்கள். துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் மைக் பென்சும், ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாட்டை வம்சாவளியாக கொண்ட கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள்.

அமெரிக்காவில் அந்த நாட்டு குடியுரிமை பெற்ற 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்பட 40 லட்சத்து 16 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். மொத்த வாக்காளர்களில் இவர்களின் பங்கு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், புளோரிடா, மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் போன்ற சில மாகாணங்கள் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. எனவே, இந்தியர்களின் வாக்குகளை பெறுவதில் டிரம்புக்கும், ஜோ பைடனுக்கும் இடையே பலத்த போட்டி இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் இன்று இறுதிநாள் என்றாலும், 3 வாரங்களுக்கு முன்பே தேர்தல் தொடங்கிவிட்டது. அங்கு, சில மாகாணங்களில் நேரடியாகவும், சில மாகாணங்களில் இ-மெயில் மூலமும், சில மாகாணங்களில் வணிக வளாகங்கள் போன்ற மக்கள்கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள எந்திரங்கள் மூலமும் வாக்குப்பதிவு நடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 நிலைகள் உண்டு. ஒன்று, தேர்தலில் மக்கள் வாக்களிப்பது. மற்றொன்று, எலக்டோரல் காலேஜ் என்று கூறப்படும் தேர்தல் சபை வாக்களிப்பது. டிசம்பர் 14-ந்தேதி நடக்கும் இந்த தேர்தல் சபையில், பிரதிநிதிகள் அவையை சேர்ந்த 435 பேர் மற்றும் பிரதிநிதிகள் அவையில் இடமில்லாத கொலம்பியா மாவட்டத்திற்கு என 3 உறுப்பினர்கள், சென்ட் அமைப்பின் 100 உறுப்பினர்கள் ஆகிய 538 இடங்களில் யார் 270 இடங்கள் பெறுகிறார்களோ, அவர்தான் அமெரிக்க ஜனாதிபதியாக முடியும். இந்த உறுப்பினர்களும் தாங்கள் நினைத்த வேட்பாளருக்கு ஓட்டுபோட்டுவிட முடியாது. அந்தந்த மாகாணங்களில் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் வேட்பாளருக்குத்தான் ஓட்டு போட முடியும். அவர்களுக்குத்தான் செனட் உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். அதனால், உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிற ஜாலமெல்லாம் அங்கு நடக்காது.

கடைசியாக நடந்த தேர்தல் கணிப்பில், ஜோ பைடனுக்கு ஆதரவான நிலைப்பாடு தெரிகிறது. என்றாலும் 14 மாகாணங்கள் ஊசலாடுவதால், தேர்தல் முடிவு இறுதியாக வந்தபிறகுதான் யார் ஜனாதிபதி? என்பது உறுதியாக தெரியும். யார் ஜனாதிபதியாக வந்தாலும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள். எனவே, யானை ஜெயித்தாலும், கழுதை ஜெயித்தாலும் இந்தியாவுக்கு ஒன்றுதான். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 6-ந்தேதி, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்தான் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, அதுவரை காத்திருந்தாக வேண்டும்.

Next Story