முத்திரை பதிக்கும் முத்ரா கடன்கள்!


முத்திரை பதிக்கும் முத்ரா கடன்கள்!
x
தினத்தந்தி 3 Nov 2020 9:30 PM GMT (Updated: 3 Nov 2020 4:48 PM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மெல்ல... மெல்ல... மீண்டெழுந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும், பொருளாதார வளர்ச்சி ஒரு மீண்டெழும் வழியின் வாசலில் நிற்கிறது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியிருக்கிறார். இந்த நிலைக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறு வணிகங்கள், சுய வேலைவாய்ப்பை தரும் தொழில்கள், சிறிய கடைகள் மூலமாகத்தான் அடிமட்ட மக்கள் பெரிதும் பயன்பெற முடியும். குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், அவர்களும் சிறிய அளவில் வியாபாரம் தொடங்க வேண்டும். இவ்வாறு சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

உற்பத்தி, சேவை, சிறு வணிகங்கள், சிறிய அளவிலான தொழில்கள் உள்பட வியாபாரம் செய்யும் அனைவரும் இதில் பயன்பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் கொடுக்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்களும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களும், தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களும் வழங்கப்படுகிறது. மொத்தக் கடன்களில் 88 சதவீத கடன்களும், மொத்த கடன் வழங்கப்பட்ட தொகையில் 48 சதவீத தொகையும், ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக வாங்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.3.37 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடுதான் முதலிடம் வந்து முத்திரை பதித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.35 ஆயிரத்து 17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பெண்களுக்குத்தான் நிறைய கடன்கள் வழங்கப்பட்டு, அதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. முத்ரா கடன்களை பொறுத்தமட்டில், இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் தான் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருந்ததே தவிர, அதன்பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கிய நிதியாண்டிலும் 8-7-2020 வரை ரூ.2 ஆயிரத்து 446 கோடியே 60 லட்சம் கடனை, 4 லட்சத்து 88 ஆயிரத்து 731 பேர் பெற்றிருக்கிறார்கள் என்று பெருமைப்பட கூறுகிறார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன். இவர்களில் பெரும்பாலானோர் சிறு வணிகர்கள், சிறிய அளவில் தொழில் செய்பவர்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே முடங்கிப்போன தங்கள் தொழிலை மீட்டெடுப்பதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் இந்த கடனுதவியை பெற்றிருக்கிறார்கள். வாங்கிய கடனை திரும்ப கட்டுவதிலும், தமிழக மக்கள் பெரும்பாலும் பொறுப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

இப்போது கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் உயிர்பெற்று எழ வேண்டும் என்றால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும், வருமானம் வேண்டும். எல்லோருக்கும் வேலைவாய்ப்பை கொடுத்துவிட முடியாது. இதுபோன்ற சுய வேலைவாய்ப்புகளுக்கும், சுய தொழில்களுக்கும் ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கும் முத்ரா கடன்களை பெற்று பயன்பெற முடியும். எனவே, தமிழகம் முழுவதும் இன்னும் முத்ரா கடன்களை பற்றி தெரியாமல் இருக்கும் அனைவருக்கும், குறிப்பாக பெண்கள், இளைஞர்களுக்கும் இந்த திட்டம் குறித்து போதிய அளவில் மத்திய, மாநில அரசுகள் விளம்பரப்படுத்த வேண்டும். எல்லோரும் இதன் பயனை பெற வேண்டும் என்பதே இப்போதைய நிலையில் தேவையான ஒன்றாக இருக்கிறது.

Next Story