பட்டாசு தொழிலுக்கு வந்த சோதனை


பட்டாசு தொழிலுக்கு வந்த சோதனை
x
தினத்தந்தி 4 Nov 2020 9:30 PM GMT (Updated: 2020-11-05T05:01:00+05:30)

கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு தொழிலுக்கு அடி மேல் அடி விழுகிறது.

‘உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி’ என்று தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் அளவுகடந்த மகிழ்ச்சியோடு மக்கள் கொண்டாடுவார்கள். தீபாவளியின் சிறப்பே பட்டாசுதான். முதல்நாள் இரவும் சரி, தீபாவளி அன்றும் சரி, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தங்கள் குதூகலத்தை பட்டாசு கொளுத்தி தான் காண்பிப்பார்கள். பட்டாசு உற்பத்திக்கு இந்தியாவின் தலைநகரம் தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி என்பதில் ஒரு தனி பெருமை உண்டு. ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு நாடுமுழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் சிறியதும், பெரியதுமாக இருக்கிறது. 3 லட்சம் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இதுதான் நேரடியான வேலைவாய்ப்பு. இதுதவிர 5 லட்சம் தொழிலாளர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பை இந்த தொழில் வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு தொழிலுக்கு அடி மேல் அடி விழுகிறது. முதலில் சீனப்பட்டாசு திருட்டுத்தனமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது.

கடந்த ஆண்டு பசுமைப்பட்டாசு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் 60 நாட்களுக்கு மேலாக தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டநிலையில், தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லை. உற்பத்தியும் பெருமளவில் சரிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தானில் சில டாக்டர்கள் கடந்த மாதம், ‘பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படும், என்று கொளுத்திப்போட்ட சரவெடி வேகமாக வெடிக்க தொடங்கியது. ராஜஸ்தான் அரசாங்கம், இந்த தீபாவளியின் போதும், தொடர்ந்து வரும் திருமணக்காலத்தின் போதும் பட்டாசு வெடிக்க தடைவிதித்து இருக்கிறது. தொடர்ந்து ஒடிசா மாநில அரசும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. டெல்லி அரசாங்கம் ஏற்கனவே பசுமைப்பட்டாசு தான் வெடிக்க வேண்டும். அதை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துவிட்டது. 

கர்நாடக அரசும் பட்டாசுக்கு தடைவிதிக்க பரிசீலிப்பதாக கூறிவிட்டது. கொல்கத்தா ஐகோர்ட்டில் இதற்கு தடைவிதிக்கக்கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டிலேயே மொத்த பட்டாசு விற்பனையில் 12 சதவீதம் ராஜஸ்தானிலும், 3 சதவீதம் ஒடிசாவிலும் நடக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலமாக பட்டாசுக்கு தடைவிதித்தால், இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பும் பெரிதும் பாதிக்கப்படும்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் தினமும் பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி நடந்து, அந்தநாளின் இறுதியில் கழிவுகளை தீ வைத்து கொளுத்துகிறார்கள். ஆனால் இதுவரை தொழிலாளர்களுக்கோ, அப்பகுதி மக்களுக்கோ, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் அடித்து சொல்கிறார்கள். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியமும் சுப்ரீம் கோர்ட்டிலேயே, பட்டாசு கொளுத்துவதால் தீங்கு விளைவிக்கும் வாயு எதுவும் வெளிவராது என்று கூறியிருப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கூறப்படுகிறது. எந்த முடிவு எடுத்தாலும் முதலில் எடுக்காமல் இப்படி கடைசி நேரத்தில் எடுப்பது இதுபோன்ற தொழில்களை நிச்சயம் நசிவடைய செய்துவிடும். ஆண்டு முழுவதும் காற்றுமாசு ஏற்படுத்தும் தொழில்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இப்படி ஒருநாள் தீபாவளி பண்டிகையன்று மகிழ்ச்சிக்காக வெடிக்கும் பட்டாசு தான் மாசு ஏற்படுத்துகிறது என்று சொல்வது ஏற்புடையதல்ல. பட்டாசு வெடிப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சில டாக்டர்கள் கூறுகிறார்களே தவிர, அறிவியல் ரீதியாக எந்தவொரு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. எனவே தீபாவளி பண்டிகையின் மரபுப்படி பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்காமல் இருப்பது நல்லது. நேரக்கட்டுப்பாடும் வேண்டாம்.

Next Story