பள்ளிக்கூடம், கல்லூரிகளை இப்போது திறக்கவேண்டுமா?


பள்ளிக்கூடம், கல்லூரிகளை இப்போது திறக்கவேண்டுமா?
x
தினத்தந்தி 5 Nov 2020 9:30 PM GMT (Updated: 5 Nov 2020 4:45 PM GMT)

“கொரோனாவின் 2-வது அலைவீசும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்த நிலையில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை திறக்கவேண்டுமா?” என்ற கேள்வியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.

கொரோனா பரவல் தமிழ்நாட்டில் குறைந்திருந்தாலும், தொடர்ந்து குறைந்து அப்படியே ஒழிந்துபோய்விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நன்றாக குறைந்திருந்த கேரள மாநிலத்தில் இப்போது பரவல் அதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் 2-வது பரவல் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் 10-வது ஊரடங்கு கடந்த 1-ந்தேதி முதல் பல தளர்வுகளுடன் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடும்போது, “தளர்வின் முதல் அறிவிப்பாக பள்ளிக்கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் 16-ந்தேதி முதல் திறக்கப்படும். இதுபோல மாணவர்கள் விடுதிகளும் திறக்கப்படும்” என்று அறிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். “கொரோனாவின் 2-வது அலைவீசும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்த நிலையில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை திறக்கவேண்டுமா?” என்ற கேள்வியை கேட்டார். மேலும், “சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், தொடக்கப் பள்ளிக்கூடங்களைவிட, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது” என்றும் கூறினார். ஓய்வுபெற்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இதுபற்றி கூறும்போது, “மற்ற பணியிடங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள்போல, பள்ளிகூடங்களுக்குள்ளும், கல்லூரிகளுக்குள்ளும் மாணவர்கள் நுழையும்போதோ, வகுப்பறைகளிலோ சமூகஇடைவெளியை பின்பற்றுவது என்பது மிகவும் கடினம். ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், மற்றவர்களுக்கு வேகமாக பரவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல, ஆசிரியர்களுக்கு தொற்று இருந்தால், அந்த வகுப்பிலுள்ள மாணவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால், பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்கள் வீடுகளிலுள்ள குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. பள்ளிக்கூட மாணவர்களாவது மாலையில் நேராக வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், கல்லூரி மாணவர்களில் சிலரோ நண்பர்களுடன் பொழுதுபோக்கிவிட்டு வீடுதிரும்பும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இது சங்கிலித் தொடர்போல பரவலை ஏற்படுத்திவிடும். ஆந்திராவில் இவ்வாறு பள்ளிகூடங்கள் திறக்க அனுமதியளித்த நிலையில், இப்போது தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் வேலை பார்த்த 160 ஆசிரியர்களுக்கும், 262 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை. அது வந்தால் மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஒருசில பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதையொட்டி, பள்ளிக்கூடங்கள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில், கொரோனா பரவல் மிகவும் எளிதாக பரவக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில், முதலில் பள்ளிக்கூடம், கல்லூரிகளை திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, இப்போது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து பெற்றோரிடம் வருகிற 9-ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

பெற்றோரிடம் கருத்து கேட்டால், மாணவர்களின் உயிரா?, படிப்பா? என்று தராசின் இரு தட்டுகளில் வைத்து பார்த்து முடிவு செய்தால், நிச்சயமாக 16-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு ஆதரவான கருத்துகளை பெற்றோர் தெரிவிக்கமாட்டார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? என்பார்கள். அதுபோல இந்த கருத்துக்கேட்பு கூட்டமே தேவையில்லை. ஆந்திராவில் பள்ளிக்கூடங்களை திறந்த ஒருசில நாட்களிலேயே ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலின் சொன்னபடி, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் கூறிய கருத்தான நவம்பருக்கு பதில், பொங்கல் விடுமுறை முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் அப்போதுள்ள சூழ்நிலைகளை முழுமையாக ஆராய்ந்து பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் திறப்பதே சாலச்சிறந்தது.

Next Story