சாதனை படைத்த ஜோ பைடன்-கமலா ஹாரிஸ்


சாதனை படைத்த ஜோ பைடன்-கமலா ஹாரிஸ்
x
தினத்தந்தி 8 Nov 2020 11:43 PM GMT (Updated: 8 Nov 2020 11:43 PM GMT)

உலகமே ஆவலோடு உற்றுநோக்கி கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜோ பைடன்தான் 46-வது ஜனாதிபதி, தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்தான் 49-வது துணை ஜனாதிபதி என்ற முடிவு தெளிவாக தெரிந்துவிட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில்தான் தெரிவிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதிதான் டிரம்பின் பதவிகாலம் முடிந்து ஜோ பைடன் பதவியேற்க முடியும். அமெரிக்கா அரசியல் சட்டப்படி 50 மாகாணங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதவிர செனட் சபையில் 100 உறுப்பினர்கள் உண்டு. மக்கள் பிரதிநிதிகள், கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த 3 உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்களை சேர்த்து 538 பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் தேர்தல் சபை. 50 மாகாணங்களில் கிடைக்கும் வெற்றியை வைத்து ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படமாட்டார். தேர்தல் சபையில் யார் 270 வாக்குகளுக்கு மேல் பெறுகிறார்களோ அவர்கள்தான் ஜனாதிபதியாக முடியும். அந்தவகையில் இப்போதே பைடனுக்கு 270 ஓட்டுகளுக்கு மேல் கிடைத்துவிடும் என்பது உறுதி செய்யப்பட்டநிலையில், அவரே வெற்றி வேட்பாளராக கருதப்பட்டு பிரதமர் நரேந்திரமோடி உள்பட உலகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது.

ஜோ பைடனும், கமலா ஹாரிசும் பல முத்திரைகளை பதித்துள்ளனர். ஜனாதிபதி பொறுப்பு ஏற்கபோகும் அதிக வயதானவர் பைடன்தான். ஜனவரி மாதம் பதவி ஏற்கும்போது அவருக்கு 78 வயதாகும். ஜனநாயக கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கமலாஹாரிஸ்தான் என்பதும் தெளிவாகிவிட்டது. துணை ஜனாதிபதியாக இருந்து அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பை ஏற்கபோகும் 15-வது ஜனாதிபதி ஜோ பைடன் என்றாலும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தபதவிக்கு செல்லும் 6-வது துணை ஜனாதிபதி ஆவார். இந்த தேர்தலில் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதில் பைடன் 7½ கோடிக்கு மேல் இதுவரையில் வாக்குகளை பெற்றுள்ளார். முன்பு இந்த சாதனையை ஏற்படுத்திய ஒபாமா 2008-ம் ஆண்டு 6 கோடியே 95 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். 50 மாகாணங்களில் 43 மாகாணங்களில் முன்பைவிட வாக்குப்பதிவு அதிகம் நடந்திருக்கிறது.

10 கோடியே 14 லட்சம் பேர் இ-மெயிலில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுபோல் கமலா ஹாரிஸ்தான் 244 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதுமட்டுமின்றி முதல் இந்திய-அமெரிக்க, இந்திய-ஆப்பிரிக்கா இனத்தை சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த ஷியாமளா கோபாலனின் மகள். அவரது தந்தை ஆப்பிரிக்காவில் உள்ள ஜமைக்காவை சேர்ந்தவர். இதுவரையில் இருந்த 48 துணை ஜனாதிபதிகளும் அமெரிக்கர்கள்தான். இப்படி இருவரும் பல சாதனைகளை புரிந்தநிலையில் இந்திய-அமெரிக்க உறவு இன்னும் மென்மேலும் தழைக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.

2006-ம் ஆண்டு பைடன் கூறிய ஒரு சில வாசகங்களை நிறைவேற்றுவார் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அப்போது அவர், ‘2020-ம் ஆண்டு உலகிலேயே மிக நெருக்கமான உறவுகொண்ட நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழும் என்பதுதான் எனது கனவு. அது நடந்தால் உலகம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்’ என்று கூறியிருந்தார். இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கை கூட்டாளிகள் என்பது அவரது கருத்து. தாங்கள் இருவரும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உறுதியாக தெரிந்தநிலையில் வில்மிங்டன் நகரில் நடந்த வெற்றிவிழா விருந்தில் பைடனும், கமலா ஹாரிசும் முககவசம் அணிந்துவந்து ஆற்றிய உரை அரசியல் நாகரிகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவு, ‘எச்.1 பி விசா’ பிரச்சினை உள்பட பல விஷயங்களில் பைடன் ஜனாதிபதியாக இருக்கும்போது உறவுகள் வலுப்பட தமிழ்நாட்டு வம்சாவளியான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் துணையாக நிற்பார் என்பது இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story