தீபாவளி தாண்டினால் போதும்!


தீபாவளி தாண்டினால் போதும்!
x
தினத்தந்தி 9 Nov 2020 7:44 PM GMT (Updated: 9 Nov 2020 7:44 PM GMT)

ஆங்கிலத்தில் ‘திஸ் டூ ஷேல் பாஸ்’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அதாவது, ‘இதுவும் கடந்துபோகும்’ என்பதுதான் அதன் பொருள். அதுபோன்ற ஒரு நிலையைத்தான், கொரோனா பரவலில் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ‘திஸ் டூ ஷேல் பாஸ்’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அதாவது, ‘இதுவும் கடந்துபோகும்’ என்பதுதான் அதன் பொருள். அதுபோன்ற ஒரு நிலையைத்தான், கொரோனா பரவலில் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கொடிய கொரோனா தமிழ்நாட்டை தாக்கியதை தொடர்ந்து, மார்ச் 25-ந்தேதி, முதல் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஊடரங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 1-ந்தேதி 10-வது ஊரடங்கு ஒரு மாத காலத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிறைய தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், “கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், இனிவரும் காலங்களில் முழு ஊரடங்கு தேவையில்லை” என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் அறிவித்துள்ளது பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில், முதலில் ஒருவருக்கு கொரோனா என்று தொடங்கிய நிலை, ஜூலை 27-ந்தேதி 6,993 பேருக்கு என்று உச்சநிலையை அடைந்தது. இதுபோல, ஆகஸ்டு 15-ந்தேதி 127 உயிரிழப்புகள் ஏற்பட்டது. அக்டோபர் 12-ந்தேதியில் இருந்து, கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. நேற்றைய கணக்குப்படி 2,257 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. உயிரிழப்பும் 18 ஆக குறைந்தது. மற்றொரு நம்பிக்கை தரும் தகவல் என்னவென்றால், கேரளாவில் 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 11 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 3 பேருக்கு என்று குறைவாக இருந்தாலும், சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது. எனவே, இந்த மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த 5-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் 2-வது அலை மற்றும் 3-வது அலை ஏற்படும் அபாயமும் இருக்கிறது” என்று கூறிய தகவல் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில்தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கேரளாவில் வெகுவாக குறைந்துகொண்டிருந்த கொரோனா பரவல், ஓணம் பண்டிகைக்கு பிறகும், மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் அதிகரித்தது. ஏனென்றால், அந்த நேரங்களில் சமூக இடைவெளியும் இல்லை, முககவசம் அணிவதும் இல்லை என்றநிலை இருந்தது.

அதேபோன்ற ஒரு நிலைதான், இப்போது தமிழ்நாட்டிலும் இருக்கிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் கடைகளுக்கு போய்த்தான் பொருட்களை வாங்கியாக வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால், இப்போதெல்லாம் வீட்டில் இருந்துகொண்டே, விரும்பிய கடைகளில் இருந்து ‘ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்கிவிட முடியும். சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தொற்றுநோய் நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், சென்னையிலுள்ள குடிசைப் பகுதிகளில் 50 சதவீதம் பேரும், மற்ற இடங்களில் 40 சதவீதம் பேரும் முககவசம் அணிவது இல்லை என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் இதுவரை முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது போன்ற நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினால், தீபாவளியோடு கொரோனா பரவலை தடுக்க முடியும். பண்டிகை கொண்டாட்டம் அவசியம்தான். அதே நேரத்தில், உயிர் அதைவிட முக்கியம் என்பதை கருத்தில்கொண்டு, தீபாவளி நேரத்தில் கொரோனா பரவலில் இருந்து காப்பாற்றிக்கொள்வது மக்கள் கையிலும், அரசின் கையிலும்தான் இருக்கிறது. இப்போது வெகுவாக குறைந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தீபாவளியை ஒட்டியும், அதற்கு பிறகும் நீடித்தால், தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட விரைவாக கொரோனாவுக்கு விடைகொடுத்து அனுப்பிவிடலாம்.

Next Story