பைடன் அணியில் இந்தியர்கள்!


பைடன் அணியில் இந்தியர்கள்!
x
தினத்தந்தி 10 Nov 2020 7:40 PM GMT (Updated: 10 Nov 2020 7:40 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு, அதிகாரப்பூர்வமாக ஜனவரி 6-ந் தேதிதான் வெளியிடப்படும் என்றாலும், இப்போதுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவின் அடிப்படையில், ஜோ பைடன்தான் வெற்றிபெறுவார் என்ற உறுதியான நம்பிக்கை உலகம் முழுவதிலும் இருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு, அதிகாரப்பூர்வமாக ஜனவரி 6-ந் தேதிதான் வெளியிடப்படும் என்றாலும், இப்போதுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவின் அடிப்படையில், ஜோ பைடன்தான் வெற்றிபெறுவார் என்ற உறுதியான நம்பிக்கை உலகம் முழுவதிலும் இருக்கிறது. அதனால்தான் ஜோ பைடனுக்கு உலகம் முழுவதிலுமுள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவில் ஏறத்தாழ 20 லட்சம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். மொத்த வாக்காளர்களில் இவர்கள் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும், பல மாகாணங்களில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கினார்கள். இந்தியர்களின் கணிசமான வாக்கு ஜோ பைடன் கட்சியான ஜனநாயக கட்சிக்கு கிடைத்ததால், அந்த மாகாணங்களில் எல்லாம் ஜனநாயக கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தியர்களுக்கு இன்னொரு பெருமை தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகப்போகிறார். அடுத்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது.

சமோசா குழு என்று தங்களை பெருமையாக அழைத்துக்கொள்ளும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா, சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் மற்றொரு தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஜோ பைடன் உறுதியான வெற்றியை அடைந்துவிட்டார் என்ற தகவல் வந்தவுடன் நடந்த முதல் வெற்றிவிழா கூட்டத்தில், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் எல்லோருமே முககவசம் அணிந்து வந்தார்கள். முககவசம் அணிவதை அமெரிக்காவில் கட்டாயமாக்கும் நிலைப்பாட்டில் ஜோ பைடன் இருக்கிறார். இந்த வெற்றிவிழா கூட்டத்தில் அவர் பேசும்போது, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்தார். இந்த பணிகளை மேற்கொள்ளும்வகையில் இப்போது 13 பேர் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவக்குழுவை அமைத்துள்ளார். இதிலும் இந்தியாவை சேர்ந்த 3 டாக்டர்கள் இடம்பெற்றிருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.

இந்த 13 பேர் கொண்ட கொரோனா தடுப்பு பணிக்குழு துணைத்தலைவர் டாக்டர் விவேக்மூர்த்தி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2014-ல் வயதில் மிகவும் குறைந்த சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். டிரம்ப் ஜனாதிபதியானவுடன் 2017-ல் அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். விவேக்மூர்த்தியின் தாத்தா கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு விவசாயி. அவர் எப்போதுமே தான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் என்று பெருமையாக கூறிக்கொள்வார்.

இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள மேலும் 2 பேரில், டாக்டர் அதுல் கவண்டே புகழ்மிக்க அறுவை சிகிச்சை நிபுணர். டாக்டர் செலின் கவுண்டர் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர். இதையெல்லாம்விட பெரிய பெருமை இவர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தகப்பனார் பெயர் நடராஜ் என்ற டாக்டர் ராஜ் கவுண்டர். டாக்டர் ராஜ் கவுண்டர் சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். செலின் கவுண்டர் குடும்பம் அடிக்கடி பெருமாபாளையம் வருவது உண்டு. 2014-ல் ராஜ் கவுண்டர் காலமான பிறகு அவரது மனைவி மற்றும் செலின் கவுண்டர் உள்பட 3 மகள்கள் இணைந்து, அவர் பெயரில் ஒரு அறக்கட்டளையை அமைத்து, அவரது உறவினரான தேவராஜ் நல்லசிவம் மூலம் மொடக்குறிச்சியில் ராஜ் கவுண்டர் படித்த அரசு பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் தத்தெடுத்த மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், 3 இந்தியர்களை கொண்ட கொரோனா தடுப்பு பணிக்குழு என்னென்ன ஆலோசனைகளை வழங்கப்போகிறது? என்பதை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. பணிக்குழு என்ன ஆலோசனை வழங்கினாலும், ஜோ பைடன் கூறிய கருத்தான, அடுத்த சில மாதங்களில் எல்லோருமே முககவசம் அணிந்தால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியும் என்பதே அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே பொருந்தும் செய்தியாகும்.

Next Story