4-வது முறையாக முதல்-மந்திரி ஆகிறார் நிதிஷ்குமார்!


4-வது முறையாக முதல்-மந்திரி ஆகிறார் நிதிஷ்குமார்!
x
தினத்தந்தி 11 Nov 2020 7:47 PM GMT (Updated: 11 Nov 2020 7:47 PM GMT)

கொரோனா பரவல் நேரத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவு, அரசியலில் புது கணக்குகளை போட்டிருக்கிறது.

கொரோனா பரவல் நேரத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவு, அரசியலில் புது கணக்குகளை போட்டிருக்கிறது. தமிழ்நாட்டைவிட, பீகார் பெரிய மாநிலம். தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. ஆனால், பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன. இங்கு ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் என்று கூறப்படும் மெகாகூட்டணியும் போட்டியிட்டன. தேர்தல்பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி எங்கள் கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி வேட்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார். பா.ஜ.க. தலைவர்கள் பேசும்போது, பிரதமர் நரேந்திரமோடி- முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் ஆகியோர் இரட்டை என்ஜின்களாக இருந்து வளர்ச்சிப்பாதையில் பீகாரை கொண்டுசெல்வார்கள் என்று பிரசாரம் செய்தார்கள். லாலுபிரசாத் யாதவின் மகன் 31 வயதுள்ள தேஜஸ்வி யாதவ்தான் மெகாகூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் இந்த தேர்தல் பல ஆச்சரியமான முடிவுகளை தந்துள்ளது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 125 இடங்களிலும், மெகாகூட்டணி 110 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மத்தியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள மறைந்த மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடாமல் தனியாக போட்டியிட்டது. ஆனாலும், பா.ஜ.க.வை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்து மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இப்போது ராஷ்ட்ரீய ஜனதாதளம் 75 இடங்களைப்பெற்று முதல் இடத்தையும், பா.ஜ.க. 74 இடங்களை பிடித்து 2-வது இடத்தையும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களில் வெற்றிப்பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற்றுள்ளது. லோக்ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் வெற்றிவாய்ப்புகளை பல தொகுதிகளில் கடுமையாக பின்னுக்கு தள்ளியுள்ளது. அதேபோல மெகாகூட்டணியில் காங்கிரசுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியிருந்தால் நிச்சயமாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு அதிக இடங்கள் கிடைத்து, ஆட்சியை பிடித்திருக்கும் என்ற கருத்துகளும் அந்த கூட்டணியில் எதிரொலிக்கிறது. அந்த கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று இப்போது குற்றம்சாட்டுகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதுத்தெம்பை அளித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரசுக்கு அடுத்துவரும் சட்டசபை தேர்தல்களில் அந்தந்த கூட்டணிகளில் நிச்சயமாக கேட்கும் இடங்கள் ஒதுக்கப்படாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

70 வயதை நெருங்கும் நிதிஷ்குமார் 4-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பை ஏற்கிறார். தற்போது இருக்கும் முதல்-மந்திரிகளில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்தான் 4-வது முறையாக தொடர்ந்து முதல்-மந்திரியாக இருக்கிறார். இதுவரையில் 4 முறை தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்தவர்கள் என்றவகையில், சிக்கிம் முதல்-மந்திரியாக இருந்த பவன்குமார் சாம்லிங்தான் 24 ஆண்டுகள் 5 மாதங்கள் என நீண்டகால முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். அடுத்து மேற்குவங்காளத்தில் ஜோதிபாசு 23 ஆண்டுகள் தொடர்ந்து 4 முறை முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார். இதுபோல திரிபுரா மாநிலத்தில் மாணிக்சர்க்கார் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார். இப்படியொரு சரித்திரத்தை பீகார் தற்போது படைத்திருக்கிறது. அதுபோல 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், மணிப்பூர், கர்நாடகம், தெலுங்கானாவில் பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதே தெம்போடு அடுத்து நடைபெறவுள்ள மேற்குவங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிடும் என்பது அந்த கட்சியினரின் எதிர்பார்ப்பாகும். பீகார் தேர்தலை பொறுத்தமட்டில், பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளத்தை வெற்றிக்கோட்டுக்கு இழுத்துச்சென்றது, வெற்றிக்கோட்டுக்கு செல்லவேண்டிய ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை, காங்கிரஸ் பின்னுக்கு இழுத்துவிட்டது என்பதுதான் பல்வேறு அரசியல் விவாதங்களிலிருந்து வெளிவரும் கருத்தாக இருக்கிறது. 

Next Story