என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய தொழில் கல்வி வகுப்புகள்!


என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய தொழில் கல்வி வகுப்புகள்!
x
தினத்தந்தி 12 Nov 2020 8:10 PM GMT (Updated: 2020-11-13T01:40:35+05:30)

இந்தியா முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இப்போது மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் 461 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் இப்போது மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் 461 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 160 கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. பொதுவாக என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கொடுக்கும்போது, இந்த அளவு பரிசோதனை கூடங்கள் இருக்கவேண்டும், இந்த அளவு உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த கல்லூரிகள் எல்லாம் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளோடுதான் இருக்கிறது. வசதிகள் நிறைய இருக்கிறது, ஆனால் மாணவர்களோ குறைவாக இருக்கிறார்கள். கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், வேலையில்லாத நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, அடுத்தபக்கம் 10-ம் வகுப்புக்கு மேல், பிளஸ்-2 வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், வேலைக்கு போய்த்தான் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற நிலையிலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் தொழில் கல்வி இல்லாததால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் வாடுகிறார்கள். ஒருபுறம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொழிற்பயிற்சி வழங்க வசதிகள் இருக்கிற நிலையில், மற்றொருபுறம் தொழிற்பயிற்சி இல்லாமல், வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில், இளைஞர் சமுதாயம் ஏக்கத்தோடு இருக்கிறது.

இந்த இரு நிலையையும் சமன்செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் ஒரு நல்ல திட்டம் வழிகாட்டியுள்ளது. இத்தகைய மாணவர்களுக்கு கலை கல்லூரிகளில் அவர்கள் படிக்கும் பட்டப்படிப்புகளை சார்ந்த வகையிலும், என்ஜினீயரிங் கல்லூரிகளிலுள்ள படிப்புகளை சார்ந்த தொழில் கல்விகளை வழங்கும் வகையிலும் உள்ள அற்புதமான திட்டம் இது. இந்த திட்டத்தின்படி, பிளஸ்-2 படித்த மாணவர்கள் 3 ஆண்டுகள் படித்தால் அவர்களுக்கு தொழில் கல்வியில் பட்டப்படிப்புக்கான வகுப்புகளும், 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு, 2 ஆண்டுகள் என்றால் அட்வான்ஸ் பட்டயபடிப்பும், ஒரு ஆண்டு என்றால் பட்டயபடிப்பும் கற்பிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேறாதவர்களுக்குகூட 6 மாதம் படித்தால் தொழில் திறனில் பட்டயபடிப்பும் நடத்தப்படுகிறது. இதற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிலும், ஒவ்வொரு கல்லூரியும் 25 மாணவர்களுக்கு இந்த தொழிற் பயிற்சிக்கான வகுப்புகளை நடத்தலாம்.

மொத்தம் 354 தொழில் படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வகுத்து கொடுத்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் இதில் எந்தெந்த படிப்புகளை தங்கள் கல்லூரிகளில் நடத்த வசதிகள் இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த தொழில் கல்வி வழங்கும் படிப்புகளுக்கான வகுப்புகளை நடத்தி கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், கண்டிப்பாக செயல்முறை பயிற்சியோடும் நடத்த வகை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மெக்கானிக்கல் படிப்பவர்கள் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் செயல்முறை பயிற்சி பெறவேண்டும். சிவில் என்ஜினீயரிங் படிப்பவர்கள் ஏதாவது அரசு துறையிலோ, தனியார் நிறுவனங்களிலோ ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு செயல்முறை பயிற்சி பெறவேண்டும். இப்படி ஒவ்வொரு படிப்புக்கும், அதை சார்ந்த தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் செயல்முறை பயிற்சி பெற்றாக வேண்டும். செயல்முறை பயிற்சியின்போது மாணவர்களின் திறமை பளிச்சிட்டால் நிச்சயமாக அங்கேயே வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வேலைவாய்ப்புதான் பெறவேண்டும் என்பதில்லை. இந்த படிப்பை முடித்தவுடன், சுய வேலைவாய்ப்புகளையும் தொடங்க முடியும். என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு வேலையிழப்பில்லாமல் இயங்குவதற்கு வசதியாக இருக்கும். இத்தகைய வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்பு திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துவிட்டது. கல்லூரிகளும் தொடங்க தயாராக இருக்கிறது. ஆனால், இந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை தரும் தொழில் கல்வி படிப்புகளுக்கு உடனடியாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி, என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் புத்துயிர் கொடுத்து, இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வழியை திறக்க வேண்டும். 

Next Story