அன்று நரகாசுரன்; இன்று கொரோனா!


அன்று நரகாசுரன்; இன்று கொரோனா!
x
தினத்தந்தி 13 Nov 2020 8:07 PM GMT (Updated: 13 Nov 2020 8:07 PM GMT)

இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் இன்ப தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் இன்ப தீபாவளி கொண்டாடப்படுகிறது. சில பண்டிகைகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால், தீபாவளி இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாமல், பல நாடுகளில் பலபல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் மட்டுமல்ல, பல மதத்தினரால், பல இனத்தினரால் தீபாவளி என்று இல்லாமல் வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை எப்போதுமுதல் கொண்டாடப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டபோது, குறைந்தது 9,300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொண்டாடப்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். வடமாநிலங்களில் ராவணனை வதம்செய்து, இலங்கையில் இருந்து சீதையை மீட்டு ராமன் அயோத்தி திரும்பும்போது மக்கள் வழிநெடுக தங்கள் வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றிவைத்து வரவேற்றார்கள். அந்த நாள்தான் “தீபாவளி” என்று கொண்டாடுகிறார்கள். ராமாயணத்தில்கூட இதுதொடர்பாக பதிவு இருக்கிறது என்பது அவர்களது கருத்து.

தென்இந்தியாவை பொறுத்தமட்டில், நரகாசுரனை, கிருஷ்ணபகவானும், சத்தியபாமாவும் அழித்தநாள். அதாவது தீமையை ஒழித்தநாள் என்று தீபாவளியை கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணரை, கிருஷ்ணா, முகுந்தா, முராரி என்று பாடி வழிபடுவது வழக்கம். இந்த “முராரி” என்ற பெயர் கிருஷ்ணருக்கு வந்ததற்கு காரணமாக, நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் சென்றபோது முதலில் நரகாசுரனின் தளபதியான 5 தலைகொண்ட மற்றொரு அசுரன் “முரன்” என்பவனை கொன்றதாகவும், அதனால்தான் “முராரி” என்று வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீர் மோட்சம் அடைந்த நன்னாள் ஐப்பசி மாதம் “அமாவாசை” அன்று சமணர்கள் கொண்டாடுகிறார்கள். புத்த மதத்தினர் மாமன்னர் “அசோகர்” புத்த மதத்துக்கு மாறியநாளாக கொண்டாடுகிறார்கள். சீக்கிய மதத்தினர் தங்களின் 6-வது குருவான “குரு ஹர்கோவிந்தசிங்” குவாலியர் கோட்டையிலிருந்து விடுதலையான நாள். அன்று அவர் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தீபங்களை ஏற்றி வழிபாட்டை தொடங்கினார் என்று இந்தநாளை “பந்தி சோர் திவாஸ்” என்ற பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

பொதுவாக தீபாவளி பண்டிகை இருளை அகற்றி, ஒளியை கொண்டுவரும் நாளாகவும், தீமையை அகற்றி, மகிழ்ச்சியை கொண்டுவரும் நாளாகவும் கொண்டாடப்படும் தீப திருநாள். கொண்டாட்டங்கள் வடமாநிலங்களிலும், தென்மாநிலங்களிலும் வேறுவேறாக இருந்தாலும், இருளை அகற்றி, ஒளியை கொண்டுவரும் நாளாகத்தான் எல்லோருமே பொதுவாக கொண்டாடுகிறார்கள். இந்தநாள் மகிழ்ச்சி திருநாளும் ஆகும். அதனால்தான் அதிகாலையிலேயே எல்லோரும் விழித்து எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, வீடுகளில் விதவிதமான இனிப்புகள், உணவு வகைகளை தயார்செய்து, தாங்களும் மகிழ்ந்து, உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் நாளாகும். இந்த தீபாவளிக்கு ஒரு தனி விசேஷம் இருக்கிறது. நரகாசுரனை கொன்ற நாளாக தீபாவளியை கொண்டாடினாலும், இந்த தீபாவளியை பொறுத்தமட்டில், கொடிய அரக்கனான நரகாசுரனாக நம்கண்ணில் தென்படுவது “கொரோனா” என்ற அசுரன்தான். அந்த அசுரனை கொல்ல கிருஷ்ண பகவான், சத்தியபாமாவுடன் சென்றதுபோல, இந்த அசுரனை கொல்லவேண்டுமென்றால், ஒவ்வொருவரும் கிருஷ்ணராகவும், சத்தியபாமாவாகவும் மாறவேண்டும். அரசும் கிருஷ்ணராகவும், சத்தியபாமாவாகவும் மாறவேண்டும். இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், “இந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் உணர்வுபூர்வமான காரணங்களை குறிப்பிட்டு, தீமையை நன்மை வெல்லும். ராவணனை கொன்றுவிட்டு ராமரும், சீதையும் வீடு திரும்பும்போது வழிநெடுக வீட்டுவாசல்களில் தீபவிளக்குகள் ஏற்றிவைத்து வரவேற்றதுபோல, கொரோனாவை வெல்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் இன்றையநாளில் அரசும், மக்களும் எடுத்துக்கொள்ளவேண்டிய சபதமாகும். கொரோனாவை கொல்ல மக்கள் முககவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றினாலே தானாக இந்த கொடிய அரக்கன் ஒழிந்துவிடுவான். அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் தடுப்பூசியை கண்டுபிடித்து கொரோனா என்ற கொடிய அரக்கனை கொல்வதை சபதமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

Next Story