புல்வாமா தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்தான்!


புல்வாமா தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்தான்!
x
தினத்தந்தி 15 Nov 2020 9:51 PM GMT (Updated: 2020-11-16T03:21:11+05:30)

பொதுவாக பயங்கரவாத இயக்கங்கள்தான் நேரடியாக தாக்குதல் நடத்த தைரியம் இல்லாமல் ஒளிந்திருந்து தாக்குதலை நடத்திவிட்டு, பிறகு நாங்கள்தான் அந்த தாக்குதலை நடத்தினோம் என்று பொறுப்பு ஏற்றுக்கொள்வது வழக்கம்.

பொதுவாக பயங்கரவாத இயக்கங்கள்தான் நேரடியாக தாக்குதல் நடத்த தைரியம் இல்லாமல் ஒளிந்திருந்து தாக்குதலை நடத்திவிட்டு, பிறகு நாங்கள்தான் அந்த தாக்குதலை நடத்தினோம் என்று பொறுப்பு ஏற்றுக்கொள்வது வழக்கம். அதுபோல் புல்வாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான் என்று பாகிஸ்தான் இப்போது வெளிப்படையாக சொல்லி கொக்கரித்து இருக்கிறது. இந்த கோழைத்தனமான செயலையும் செய்துவிட்டு நாங்கள்தான் செய்தோம் என்று மார்தட்டிக்கொள்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் பல வாகனங்களில் சென்றுக்கொண்டிருந்தனர். புல்வாமா நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது 100 கிலோவுக்கு மேல் வெடிமருந்துகளை ஒரு மோட்டார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு பயங்கரவாதி, நமது ரிசர்வ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த சற்றுநேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ‘ஜெய்ஷ்-இ-முகமது’ நாங்கள்தான் இதை செய்தோம் என்று அறிவித்தது. அந்த தற்கொலைப்படை பயங்கரவாதி பெயர் ஆதில் அகமது. புல்வாமா அருகிலுள்ள ஒரு ஊரை சேர்ந்தவன். அடுத்த சில நாட்களில் இந்திய விமானப்படை இருநாட்டு எல்லையை தாண்டி அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தானில் உள்ள ‘ஜெய்ஷ்-இ-முகமது’ முகாம்களை குண்டுவீசி அழித்தது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களில் 2 வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடில் கிராமத்தை சேர்ந்த சி.சிவசந்திரன். இவர் 2010-ம் ஆண்டு மத்திய ரிசர்வ்படையில் சேர்ந்திருக்கிறார். அவரது மனைவி பெயர் காந்திமதி. அடுத்தவர் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த 28 வயதான ஜி.சுப்பிரமணியன். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ்படையில் சேர்ந்த அவர், தன் மனைவி கிருஷ்ணவேணியுடன் தலைப்பொங்கலை கொண்டாடிவிட்டு பணிக்கு திரும்பிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இருவரது குடும்பத்துக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.20 லட்சம் கருணைத் தொகை வழங்கியதோடு மட்டும் அல்லாமல், காந்திமதி, கிருஷ்ணவேணி இருவருக்கும் அரசு பணிக்கான உத்தரவையும் வழங்கினார். இவ்வளவு நாளும் எல்லோரும் ‘ஜெய்ஷ்-இ-முகமது’ பயங்கரவாத இயக்கம்தான் இந்த கொடிய செயலை செய்தது என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாத் சாதிக் ஒரு டெலிவிஷன் பேட்டியில், ‘இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட பிறகு பாகிஸ்தான் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பேசும்போது, ‘அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்காவிட்டால் அன்றிரவு 9 மணிக்கு பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்’ என்று அறிவித்தார். இதைக்கேட்டவுடன் பாகிஸ்தான் ராணுவத்தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்துக்கொட்டியது. உடனே அந்தநேரம் எல்லோரும் அபிநந்தனை விடுவிக்க ஆதரவளித்தோம்’ என்று கூறினார். இதற்கு பதிலளித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உள்நாட்டு மந்திரி பவாத் சவுத்ரி, ‘இந்திய மண்ணிலே போய் நாம் தாக்குதல் நடத்தியிருக்கிறோம். புல்வாமா தாக்குதலின் வெற்றியானது, இம்ரான்கான் தலைமையிலான இந்த நாட்டுக்கு கிடைத்த வெற்றி. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் கிடைத்த வெற்றி’ என்று கூறினார். அறிவியல்-தொழில்நுட்ப மந்திரி சவுத்ரி, ‘பாகிஸ்தான்தான் இந்தசெயலை செய்தது’ என்றார். ஆக, பாகிஸ்தானே நாங்கள்தான் புல்வாமா தாக்குதலை நடத்தினோம் என்று ஒப்புக்கொண்டது. எனவே இதில் 3 விஷயங்கள் பகிரங்கமாக வெளிப்பட்டுவிட்டன. புல்வாமா தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்தான். பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான்தான் ஆதரவு அளிக்கிறது. இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்றாலே, பாகிஸ்தான் ராணுவத்துக்கு கை-கால்கள் எல்லாம் நடுங்குகிறது.

Next Story