கில்கித் பால்டிஸ்தானில் பாகிஸ்தான் தேர்தலை நடத்துவதா?


கில்கித் பால்டிஸ்தானில் பாகிஸ்தான் தேர்தலை நடத்துவதா?
x
தினத்தந்தி 16 Nov 2020 8:40 PM GMT (Updated: 2020-11-17T02:10:40+05:30)

1947-ல் மன்னர் ஹரிசிங் ஆளுகையில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்திய குடியரசின் ஒரு அங்கமாக திகழும் காஷ்மீர் மாநிலம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகிறது.

1947-ல் மன்னர் ஹரிசிங் ஆளுகையில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்திய குடியரசின் ஒரு அங்கமாக திகழும் காஷ்மீர் மாநிலம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகிறது. இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

14 மாதங்களுக்கு முன்பு காவலில் வைக்கப்பட்டு, அண்மையில் விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி, தேசிய கொடியை ஏற்றுவது குறித்து வெளியிட்ட கருத்துகள் பலத்த எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இதுவரையில் ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் யாரும் சொத்து வாங்கக்கூடாது என்று இருந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே உள்ளவர்கள் இனி அங்கு நிலம் வாங்கமுடியும். இந்த சட்டம் நிச்சயமாக வரவேற்கத்தகுந்தது.

இத்தகைய சூழ்நிலையில், ஜம்மு-காஷ்மீரோடு இணைந்த கில்கித் பால்டிஸ்தான் பகுதிக்கு பாகிஸ்தானின் 5-வது மாகாணம் என்ற அந்தஸ்தை வழங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்துவிட்டார். இதுமட்டுமல்லாமல், அங்குள்ள 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாகிஸ்தான் தேர்தலை நடத்திவிட்டது. யாருக்கு சொந்தமான இடத்தில், யார் தேர்தலை நடத்துவது?. இனி இந்தியா விட்டுவிடக்கூடாது. ஏற்கனவே, இந்திய வெளிவிவகாரத்துறை, கில்கித் பால்டிஸ்தான் இந்தியாவுக்கு சொந்தமான இடம், சட்டவிரோதமாக அத்துமீறி பலவந்தப்படுத்தி வைத்திருக்கும் இந்த இடத்திலிருந்து உடனடியாக பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1947-ம் ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி. அதற்கு சற்று முன்புவரை கில்கித் பால்டிஸ்தான் ஆங்கிலேய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் குத்தகையில் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு நாட்டில் 562 சமஸ்தானங்கள் இருந்தன. 559 சமஸ்தானங்கள் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவோடு இணைந்துவிட்டது. ஜம்மு-காஷ்மீர், குஜராத்திலுள்ள ஜூனா கட், ஐதராபாத் ஆகிய சமஸ்தானங்கள் மட்டும் சேரவில்லை. ஜம்மு-காஷ்மீர் அக்டோபர் மாதத்தில்தான் சேர்ந்தது. சுதந்திரத்திற்கு முன்பே ஜம்மு-காஷ்மீரை மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு சேர்த்திருந்தால், கில்கித் பால்டிஸ்தானும் பிரச்சினையில்லாமல் இந்தியாவோடு இணைந்திருக்கும். ஆனால் தொடக்கத்திலிருந்தே அந்தப்பகுதியை பாகிஸ்தான் தங்களோடு இணைந்த பகுதியாக இல்லாவிட்டாலும், அந்தப்பகுதி தனி நிர்வாகமாக பாகிஸ்தானால் தான் நிர்வகிக்கப்பட்டிருந்தது. இப்போது அதை பாகிஸ்தான் தங்கள் மாகாணமாக இணைத்துக்கொள்வதில் சீனாவுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், இனி காஷ்மீர் பிரச்சினையே கிடையாது என்று அசைக்கமுடியாத செய்தியை இந்தியா தெரிவித்துவிட்டது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் சீனா தொடக்கத்தில் இருந்தே கில்கித் பால்டிஸ்தான், பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக்கப்பட ஊக்குவித்து வந்தது. ஏனெனில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் கில்கித் பால்டிஸ்தான் வழியாக செல்கிறது என்ற வகையில், இங்கு சீனா நிறைய முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. மேலும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த இந்தியாவின் நடவடிக்கை, தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்சை சின் பகுதியையும் இந்தியா கோரக்கூடும் என்பதால், பதிலடி கொடுப்பதாக சீனா நினைக்கிறது. இதுமட்டுமல்லாமல், லடாக்கை ஒட்டியிருக்கும் இந்தப்பகுதியில் தன்னுடைய ராணுவத்தையும் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும் என்று சீனா கருதுகிறது. கில்கித் பால்டிஸ்தான் நமக்கு சொந்தமான இடமென்று அறிவித்துவிட்டு இனியும் வெறும் அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு கொண்டிருக்காமல், நமக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்துள்ள பாகிஸ்தான் மீது போர் உள்பட அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

Next Story