கொரோனா தடுப்பூசிக்கு திட்டமிடல்!


கொரோனா தடுப்பூசிக்கு திட்டமிடல்!
x
தினத்தந்தி 17 Nov 2020 9:43 PM GMT (Updated: 17 Nov 2020 9:43 PM GMT)

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கால்தடம் பதித்த கொரோனா என்ற நரகாசுரன், இன்னும் ஒழிந்தபாடில்லை. நிச்சயமாக கொரோனா தானாகவே ஒழிந்துபோகப்போவதில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கால்தடம் பதித்த கொரோனா என்ற நரகாசுரன், இன்னும் ஒழிந்தபாடில்லை. நிச்சயமாக கொரோனா தானாகவே ஒழிந்துபோகப்போவதில்லை. தமிழ்நாட்டில்கூட இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் குறைந்துவருகிறது. ஆனால், இப்படியே குறைந்துபோகும் என்று சொல்வதற்கில்லை. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “கொரோனாவில் இருந்து தப்பிப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. திருத்தணி கோவிலில் தீபாவளி அன்று நிறைய பேர் கூடினார்கள். அதில் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. அதை நானே நேரில் பார்த்தேன். மக்களிடம் இப்போது கொரோனா சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் முககவசம் அணிவதில்லை. காய்ச்சல் முகாம்களில் வந்து பரிசோதனை செய்துகொள்வதில்லை. 2-வது அலை உருவாகாமல் இருக்கவேண்டும் என்றால், மக்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறினார்.

தீபாவளி நேரத்தில், கடை வீதிகளில் மக்கள் கூட்டம், முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற மெத்தன போக்கால், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்குமா? என்பது அடுத்த 10 அல்லது 14 நாட்களுக்குள் தெரிந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், கொரோனா பாதிப்பை தடுக்கவேண்டும் என்றால், தடுப்பூசிதான் ஒரு பெரிய ஆயுதமாக இருக்கும். உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டன. இந்தநிலையில், அமெரிக்காவிலுள்ள பைசர் மருந்து நிறுவனம், “தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்து, பரிசோதனையில் 90 சதவீத வெற்றியை தந்துள்ளது” என்று கூறுகிறது.

இதுபோல, மாடர்னா மருந்து கம்பெனி, ஸ்புட்னிக் மருந்தை தயாரிக்கும் ரஷிய நிறுவனம், ஆஸ்டிரா ஜெனிகா-ஆக்ஸ்போர்டு என்ற இங்கிலாந்து நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் விற்பனையை தொடங்கும் நிலைக்கு வந்துவிட்டன. எனவே, விரைவில் மருந்து வெளிவந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பைசர் நிறுவன மருந்தை பொறுத்தமட்டில், அதை மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து, கடைக்கோடியிலுள்ள ஒரு மனிதனுக்கு போடும்வரை, மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தொடர் குளிர்சாதன வசதியில் தடுப்பூசி மருந்தை வைத்து எடுத்துச்செல்ல வேண்டும். இது நிச்சயமாக சாத்தியமில்லை. இந்தநிலையில், மாடர்னா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசி 94.5 சதவீத வெற்றியை கொண்டுள்ளது என்றும், இதை வழக்கமாக நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியிலேயே 30 நாட்கள் வைத்துக்கொள்ளலாம் என்றும், 12 மணி நேரம் அறையின் வெப்பநிலையிலேயே வைத்துக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துவிட்டது. மேலும், மைனஸ் 4 டிகிரி பாரன்ஹீட் குளிரில் 6 மாதங்கள் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதுபோல, இனி கண்டுபிடிக்கும் மருந்துகள் எல்லாம் குறைந்த குளிர்சாதன வசதியில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கும். ஆனால், தொடர் குளிர்சாதன வசதிகள், அதாவது அதை எடுத்துக்கொண்டுபோய் ஒவ்வொருவருக்கும் போடும் வரையில் தேவையாக இருக்கும். இந்த தடுப்பூசியை ஒவ்வொருவருக்கும் இருமுறை போடவேண்டும். அந்த வகையில், மத்திய அரசாங்கம் ஏற்கனவே நோவாவாக்ஸ் நிறுவனத்தில் 100 கோடி, ஆஸ்டிரா ஜெனிகா-ஆக்ஸ்போர்டு கம்பெனியில் 50 கோடி, ரஷிய நாட்டிலுள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து 10 கோடி என ஆர்டர் செய்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளார். ஆக, அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி கிடைத்துவிடும். தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளுக்கான கோரிக்கையை இப்போதே மத்திய அரசாங்கத்துக்கு தமிழக அரசு தெரிவித்துவிட வேண்டும். எந்த மருந்தை நாம் பயன்படுத்தினாலும், யார் யாருக்கு முதலில் போடுவது? என்ற பட்டியல், தேவையான அளவு தொடர் குளிர்சாதன வசதிகள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ பொருட்களை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருத்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழக சுகாதாரத்துறை இப்போதே திட்டமிட தொடங்க வேண்டும்.

Next Story