அடுத்த 14 நாட்களில் கொரோனா அலையா?


அடுத்த 14 நாட்களில் கொரோனா அலையா?
x
தினத்தந்தி 18 Nov 2020 9:17 PM GMT (Updated: 18 Nov 2020 9:17 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய அரக்கன் தன்கோர விளையாட்டை தொடங்கி, இன்னமும் நிறுத்தியபாடில்லை.

உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய அரக்கன் தன்கோர விளையாட்டை தொடங்கி, இன்னமும் நிறுத்தியபாடில்லை. தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் 7-ந்தேதி, மஸ்கட்டிலிருந்து வந்த ஒரு பொறியாளரால் கொரோனா முதலில் தன் கால்தடத்தை பதித்தது. அதன்பிறகு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும், உள்நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாலும் கொரோனா பரவல் மிகவேகமாக நடந்தது. அரசு முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. கொரோனா பரவல் மிகஅதிகமாக இருந்தது ஜூலை 27-ந்தேதி. அன்றையநாளில், 6,993 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. பின்பு மக்களின் ஒத்துழைப்பும், அரசின் நடவடிக்கையும் கொரோனா பரவலை அக்டோபர் 12-ந்தேதியில் இருந்து வேகமாக குறைக்கவைத்தது. நேற்று கணக்குப்படி 1,714 பேருக்கு தொற்று இருந்தது. 18 பேர் உயிரிழந்தனர். இப்படியே கொரோனா குறைந்துபோய்விட்டால் நல்லது என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், தீபாவளி நேரத்தின்போது மக்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொன்விதிகளான முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்காததால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் குறைந்திருந்தது. ஆனால், ஓணம் பண்டிகையின்போது மக்கள் காட்டிய அலட்சியத்தால், மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது.

தற்போது தமிழ்நாட்டில், எங்கே இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநகராட்சிகளின் கமிஷனர்களுக்கும் ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார். தீபாவளிக்கு முன்பு இருந்ததுபோல, கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், கொத்து கொத்தாக பாதிக்கப்படும் பகுதிகள் என்று புதிதாக கொரோனா பரவல் ஏற்படும் நிலையை நாம் தடுக்கமுடியாமல் போய்விடும். அடுத்த 14 நாட்களில் இருந்து 28 நாட்கள் வரை மிகவும் முக்கியமான நாட்களாகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் கட்டுமான பணிகள் நடந்த இடத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, பீகார் மாநிலத்துக்கு தேர்தல் பணிக்காக சென்றுவிட்டு திரும்பிய சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள துறைமுக குடியிருப்பில் பலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது மக்கள் பொதுஇடங்களில் முககவசம் அணிவது வெகுவாக குறைந்துவிட்டது. இதுபோல காய்ச்சல் முகாம்களுக்கு வந்து பரிசோதனை செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வும் குறைந்துவிட்டது. கலெக்டர்கள் உடனடியாக அனைத்துமட்ட வியாபாரிகள் சங்கங்களையும் அழைத்து, ஒரு சுயகட்டுப்பாட்டை அவர்களே மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும்.

முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் போன்ற கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது எல்லோருக்கும் தெரியும்படியாக காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஒகேனக்கல், வேளாங்கண்ணி, கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத்தலங்களிலும், சுற்றுலாத்தலங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற இடங்களில் தீபாவளி விடுமுறையின்போதும் மக்கள் முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும்வகையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும். எல்லோரும் முககவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்த 10, 14 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தீவிர சிகிச்சைப்பிரிவுகள் தயாராக இருக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைப்பார்த்தால், ஒருபுறம் அச்சமாக இருக்கிறது. மற்றொருபுறம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால்தானே, இப்படியொரு அச்சம் ஏற்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆக, கொரோனா பரவலை தடுப்பது மக்கள் கையில்தான் இருக்கிறது. முககவசம் அணியாமல் வெளியே செல்லமாட்டோம், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருக்கமாட்டோம் என்பதை ஒவ்வொருவரும் உறுதிமொழியாக எடுக்காவிட்டால், கொரோனா பரவலை தடுக்கமுடியாது. 

Next Story