ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!


ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!
x
தினத்தந்தி 20 Nov 2020 2:08 AM GMT (Updated: 2020-11-20T07:38:47+05:30)

இரும்பு மனிதர் என்று புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் படேல் ஒருமுறை, “ஐ நோ ஒன்லி ஒன் கல்ச்சர். தேட் இஸ் அக்ரிகல்ச்சர்” அதாவது, “எனக்கு ஒரேயொரு கலாசாரம்தான் தெரியும்.

இரும்பு மனிதர் என்று புகழ்பெற்ற சர்தார் வல்லபாய் படேல் ஒருமுறை, “ஐ நோ ஒன்லி ஒன் கல்ச்சர். தேட் இஸ் அக்ரிகல்ச்சர்” அதாவது, “எனக்கு ஒரேயொரு கலாசாரம்தான் தெரியும். அது விவசாயம்தான்” என்றார். இதைத்தான் பாரதியார், “உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடினார். அவர் உழவைத்தான் முன்னிறுத்திவைத்தார். ஏனெனில், தொழிலுக்கான கச்சா பொருட்களை உற்பத்தி செய்வதே விவசாயம்தான். விவசாயி பருத்தியை உற்பத்தி செய்தால்தான், நூற்பாலைகள், நெசவாலைகள் இயங்க முடியும். நெல் உற்பத்தி செய்தால்தான், அரிசி அரவை ஆலைகள் இயங்க முடியும். ரப்பர் உற்பத்தி செய்தால்தான், ரப்பர் தொழிற்சாலைகள் இயங்க முடியும். இப்படி தொழிலுக்கே அடிப்படையாக விளங்கும் விவசாயம்தான் இந்தியாவின் அடையாளம்.

நாட்டில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்வளிப்பது விவசாயம்தான். விவசாயம் வீழ்ந்தால் 50 சதவீதத்திற்கு மேலான மக்களின் வருமானம் வீழ்ச்சியடையும். அப்படிப்பட்ட விவசாயியின் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. விளைந்தால் விலை இல்லை. விலை இருந்தால் விளைச்சல் இல்லை என்றநிலை இருக்கிறது. அத்தகைய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள ஒருநிலை நேற்று தினத்தந்தியில் படமாக வெளிவந்தது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. வெண்டைக்காய் மகசூல் அதிகரித்த நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள காய்கறி ஏலக்கடைகளில் கிலோ ரூ.1-க்கு வெண்டைக்காய் விற்பனைக்கு கேட்டநிலையில், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்து, ரூ.1-க்கு விற்பதைவிட ஆற்றில்போய் கொட்டிவிடலாமே என்று, டிராக்டரில் வெண்டைக்காய்களை ஏற்றி முல்லைப்பெரியாற்றில் போய் கொட்டினார்கள். அவர்கள் ஆற்றில் கொட்டியது வெண்டைக்காயை மட்டுமல்ல, தனது கண்ணீரையும்தான்.

விவசாயியிடம் கிலோ ரூ.1-க்கு வெண்டைக்காய் வாங்கும்நிலை இருக்கும்போது, சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.10 என்றும், சில்லரை கடைகளில் கால் கிலோ ரூ.15 என்றும், அதாவது கிலோ ரூ.60 என்றும் விற்பனை செய்யப்பட்டது. அரசு ஒருபுறம் சுழற்சி முறையில் பயிரிடவேண்டும். நெல், வாழை போன்ற பணப்பயிர்களோடு நின்றுவிடாமல் காய்கறி பயிரிடவேண்டும் என்று ஊக்கம் அளித்துவருகிறது. ஆனால், காய்கறி பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்தநிலை என்பது, தினத்தந்தியில் நேற்று படத்தோடு செய்தியை படிக்கும்போது, மக்களின் மனதிலும் கவலையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சியால், விவசாயிகளால் தக்காளி வீதிகளில் கொட்டப்பட்டது. விவசாயம் செய்கிற விவசாயிக்கு, பயிர் செய்யும்போதே நம்பிக்கை இருக்கவேண்டும். இப்படி, நிலத்தை உழுது பண்படுத்தி, விதைகளை விதைத்து, பயிர் முளைக்கும்போது மகிழ்ச்சி பெருக்கில் ஆனந்த தாண்டவமாடி, அது வளர, வளர நீர்பாய்ச்சி, உரமிட்டு, பூச்சி மருந்து அடித்து, ஒவ்வொரு நாளும் தான் பெற்ற பிள்ளையைப்போல வளர்த்து, கடைசியில் இப்படி விலையில்லாமல் ஆற்றில் போய் கொட்டும்நிலை உருவாவதை அரசின் விவசாய துறையும், தோட்டக்கலை துறையும், கூட்டுறவு துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது.

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருப்பதுபோல, அழுகும் பொருளான காய்கறிக்கும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ஆங்காங்கு குளிர்சாதன கிடங்குகள் விவசாயிகளுக்காக ஏற்படுத்த வேண்டும். விலையில்லை என்றால், குளிர்சாதன கிடங்குகளில் வைத்து, விலை கிடைக்கும் போது, விற்பனை செய்யும் வசதிகள் விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். குஜராத்தில் தற்போது பருத்திக்கு விலை வெளிமார்க்கெட்டில் குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாகவே இருப்பதால், ஜனவரி மாதம் விலையேறும் வரை பருத்தி விவசாயிகள் விற்க வேண்டாம் என்று ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. இதேபோல, காய்கறி உள்பட அனைத்து பயிர்களுக்கும் சந்தையில், அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லை என்றால், அதை கொள்முதல் செய்யவும், சேமித்து வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுமே அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். 

Next Story