அமித்ஷா வருகிறார்; பா.ஜ.க.வில் மலர்ச்சி ஏற்படுமா?


அமித்ஷா வருகிறார்; பா.ஜ.க.வில் மலர்ச்சி ஏற்படுமா?
x
தினத்தந்தி 20 Nov 2020 9:28 PM GMT (Updated: 20 Nov 2020 9:28 PM GMT)

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.380 கோடி மதிப்பிலான தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்ட திறப்பு விழா, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.380 கோடி மதிப்பிலான தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்ட திறப்பு விழா, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுகிறார். விழா முடிந்தவுடன், அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசக்கூடும் என்று தெரிகிறது. இதுதவிர, பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணி தலைவர்களை சந்தித்து அவர் கட்சிப் பணிகளை முடுக்கிவிடுவதுடன், தேர்தல் பயணத்திற்கு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கிறார்.

பொதுவாக, அமித்ஷா ஒரு மாநிலத்திற்கு செல்கிறார் என்றால், பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை வகுத்துக்கொடுப்பார், தேர்தல் கூட்டணிகளுக்கு அச்சாரம் போட்டுவிடுவார் என்பது அரசியல் அரங்கில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். பீகார் தேர்தலில் அவர் வகுத்துக்கொடுத்த யுக்திதான் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு 125 இடங்களை பெற்றுத்தந்தது. இதில், பா.ஜ.க. 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. என்றாலும், பாசமிக்க பெரிய அண்ணனாக பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமாரே முதல்-மந்திரி பொறுப்பை ஏற்று ஆட்சியமைக்க வழிவிட்டது. ஆனால், 2 துணை முதல்-மந்திரிகள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்தான்.

பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, அமித்ஷாவின் அடுத்தகுறி, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கப்போகும் மேற்கு வங்காளம், தமிழ்நாடு மீதுதான் என்பது எல்லா மட்டங்களிலும் பேசப்படுகின்ற ஒன்றாகும். கடந்த மாதம் மேற்கு வங்காளத்திற்கு அமித்ஷா சென்றார். அப்போதே, “மேற்கு வங்காளத்தில் வரப்போகிற தேர்தலில் பா.ஜ.க. 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மம்தா பானர்ஜியால் இதை தடுத்து நிறுத்தவே முடியாது” என்று உறுதிபட கூறினார். இப்போது, மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பா.ஜ.க. சார்பில் 11 மேல்மட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 294 சட்டமன்ற தொகுதிகளும், 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தை முடித்துவிட்டு, இப்போது அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாட்டில் நிச்சயமாக பா.ஜ.க.வால் இப்போது ஆட்சியமைக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூட, “அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்சியமைப்பதை இலக்காக கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், சட்டசபையில் பா.ஜ.க. உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய திட்டம். மாநில பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு, தடையை மீறி நடத்தும் “வேல் யாத்திரை” ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வை பொறுத்தமட்டில், தமிழக சட்டசபையில் 1996, 2001 தேர்தல்களில் பிரதிநிதித்துவம் இருந்தது. அதன்பிறகு, சட்டசபையில் பா.ஜ.க.வின் முகம் தென்படவில்லை. இந்தமுறை, அமித்ஷாவின் வருகை, பா.ஜ.க.வின் தேர்தல் பணியை முடுக்கிவிடும் ஒரு சாரதிபோல இருந்து, புது வேகம் பிறக்கும் என்றும், கூட்டணி குறித்த அடித்தளம் உருவாக்கப்படும் என்றும் பா.ஜ.க.வினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, அமித்ஷா ஒரு மாநிலத்திற்கு சென்றால், அதன் அதிர்வு அன்றே தெரியாது. அடுத்த சில நாட்களில்தான் தெரியும். அதுபோல, அமித்ஷாவின் இன்றைய வருகை பா.ஜ.க.வின் தேர்தல் நோக்கிய பயணத்தில் எந்த அளவுக்கு மலர்ச்சியை ஏற்படுத்தும்?, அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடருமா?, எத்தனை இடங்கள் பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்படும்? என்பதற்கெல்லாம் இன்று அச்சாரம் போடப்பட்டுவிடும் என்பதுதான் எல்லோருடைய உறுதியான எண்ணமும் ஆகும்.

Next Story