பீகார் பின்னடைவு 4 மாநிலங்களில் எதிரொலிக்குமா?


பீகார் பின்னடைவு 4 மாநிலங்களில் எதிரொலிக்குமா?
x
தினத்தந்தி 22 Nov 2020 10:30 PM GMT (Updated: 22 Nov 2020 10:30 PM GMT)

பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவு பா.ஜ.க.வுக்கு ஒரு புதுத் தெம்பையும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கிராமங்களில், “தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டியது போல இருக்கிறது” என்பார்கள். ஆனால், அரசியலில், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு பீகார் தேர்தல் முடிவு என்ற ஒரு தென்னை மரத்தில் தேள் கொட்டியது, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அசாம் போன்ற பனை மரங்களில் நெறி கட்டுவது போல் ஆகும் நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவு பா.ஜ.க.வுக்கு ஒரு புதுத் தெம்பையும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 125 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தொடக்கத்தில் இருந்தே எந்த அணி வெற்றிபெற போகிறது? என்று ஒரு பரபரப்பான சூழ்நிலை இருந்தது. இறுதியில் 15 இடங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றது.

ஐக்கிய ஜனதா தள கூட்டணியிலுள்ள எல்லா கட்சிகளும் ஓரளவு நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில், எதிரணியில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மட்டும் 19 இடங்களில்தான் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கி, அந்த இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியோ, அல்லது அந்த தொகுதிகளில் செல்வாக்குள்ள மற்ற கூட்டணி கட்சிகளோ போட்டியிட்டு 10 அல்லது 15 இடங்கள் கூடுதலாக கிடைத்திருந்தால், காட்சியும் மாறியிருக்கும், ஆட்சியும் மாறியிருக்கும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத கருத்தாக இருக்கிறது.

அடுத்த ஆண்டு தொடர்ந்து 4 மாநிலங்களில், அதாவது மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த 4 மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு அணியுடன் கூட்டணி வைத்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அங்கேயும் இப்போதே காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம் ஒதுக்கவேண்டும்? என்பதில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருந்தது. அதாவது, 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருந்தது. அப்போதே, தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட்டு, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியிருந்தால் நிச்சயமாக ஆட்சியை பிடித்திருக்க முடியும் என்ற பேச்சு கட்சியில் பரவலாக எழுந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தமட்டில், தி.மு.க. எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்துவிடவேண்டும் என்றநிலையில், போட்டியிடும் இடங்களில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான இடங்களில் வெற்றி பெற்றாகவேண்டும் என்ற நோக்கில் முயற்சிகளை தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இப்போதே தேர்தல் சூடுபிடித்துவிட்டது. தி.மு.க. பல நாட்களுக்கு முன்பே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்து, அந்தக் குழுவும் தன் பணியை தொடங்கிவிட்டது. சமீபத்தில் அ.தி.மு.க.வும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையும், மண்டல பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளது. நேற்று முன்தினம் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துவிட்டனர். அடுத்து, மேலும் எந்தெந்த கட்சிகள் எந்தக் கூட்டணிகளில் இடம்பெறுவார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆக, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும்?, பீகார் தேர்தல் பின்னடைவின் தாக்கம் அதில் இருக்குமா? என்பதெல்லாம் அப்போது தெரிந்துவிடும்.

Next Story