இவர்களுக்கு கொடுங்கள்; மற்றவர்களுக்கும் வேண்டும்!


இவர்களுக்கு கொடுங்கள்; மற்றவர்களுக்கும் வேண்டும்!
x
தினத்தந்தி 24 Nov 2020 9:53 PM GMT (Updated: 24 Nov 2020 9:53 PM GMT)

பொதுவாக, “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்பார்கள். அதுபோல, சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயுள்ள அரசியல் போட்டி, ஆரோக்கியமான போட்டியாக மாறி, மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

பொதுவாக, “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்பார்கள். அதுபோல, சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயுள்ள அரசியல் போட்டி, ஆரோக்கியமான போட்டியாக மாறி, மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதுபோலத்தான், இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் படித்து, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகை அமைந்திருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் அமெரிக்காவில் 41 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அதைவிட அதிகமாக 49 சதவீத மாணவர்கள் சேருகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த அகில இந்திய அளவிலான உயர் கல்வி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் இதுவரை ஆண்டுக்கு 6 பேர்தான் சேரும்நிலை இருந்தது. இப்போது 405 மாணவர்களுக்கு இடம் கிடைத்தும், அரசு கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளிலும் கட்ட வேண்டிய கல்லூரி மற்றும் விடுதி கட்டணத்தை கட்டமுடியாமல், 6 மாணவர்கள் ‘வேண்டாம்’ என்று போய்விட்டார்கள். மீதமுள்ள 399 மாணவர்களில், 313 பேருக்கு மருத்துவ கல்லூரிகளிலும், 86 பேருக்கு பல் மருத்துவ கல்லூரிகளிலும் இடம் கிடைத்தது. இதில், ஆண்களுக்கு 114 இடங்களும், பெண்களுக்கு 285 இடங்களும் கிடைத்தன.

இந்தநிலையை கண்டதும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். தமிழக அரசும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்ற காரணத்திற்காக எந்த மாணவரையும் சேர்க்காமல் விட்டுவிடக்கூடாது. ‘போஸ்ட் மெட்ரிக்’ என்ற கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த நேரத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தி.மு.க. ஏற்கும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். சற்று நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்தும் விதமான தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணம் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும்” என்ற நல்ல, ஒரு வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், “பணம் கட்டும் அளவுக்கு வசதியில்லை” என்று தங்களுக்கு கிடைத்த இடத்தையும் விட்டுவிட்டு சென்ற 6 மாணவர்களுக்கும் மீண்டும் கல்லூரியில் சேர தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில், அவர்களும் ஏழை மாணவர்கள்தான். அதுபோல, அரசு பள்ளிக்கூடங்களில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் கல்லூரி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவ கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், ஏன் கலை கல்லூரிகளில்கூட கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் செலவையும் அரசே ஏற்க வேண்டும். அதாவது, மருத்துவ மாணவர்கள் மீது வைத்துள்ள கருணைப்பார்வை மற்ற துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்கள் மீதும் விழ வேண்டும் என்பதுதான் ஏழை மாணவர்களின் அபயக்குரலாக இருக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு கொடுத்த குரலை மற்ற மாணவர்களுக்கும் அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும். அரசும் மனமிறங்க வேண்டும் என்பதுதான் இப்போதைய வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story