நிவர் புயலும், நிம்மதி பெருமூச்சும்!


நிவர் புயலும், நிம்மதி பெருமூச்சும்!
x
தினத்தந்தி 26 Nov 2020 9:30 PM GMT (Updated: 2020-11-27T04:28:13+05:30)

‘நிவர்’ புயல், பெரும்பாதிப்பு இல்லாமல் கரையை கடந்தது, எல்லோரையும் நிம்மதி பெருமூச்சு விடவைக்கிறது.

தானே, ஒகி, கஜா புயல்களை போல, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமோ? என்று 5 நாட்களாக தமிழக அரசையும், மக்களையும் நடுங்க வைத்துக்கொண்டிருந்த ‘நிவர்’ புயல், பெரும்பாதிப்பு இல்லாமல் கரையை கடந்தது, எல்லோரையும் நிம்மதி பெருமூச்சு விடவைக்கிறது. கடந்த 21-ந்தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி, 23-ந்தேதி தாழ்வுமண்டலமாகவும், அதேநாளில் தீவிர காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவும் அது உருவெடுத்தது.

அதன்தொடர்ச்சியாக, 24-ந்தேதி புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘நிவர்’ என்று பெயர்சூட்டப்பட்டது. இந்த பெயரை சூட்டியது ஈரான் நாடு. நிவர் என்பதற்கு ‘வெளிச்சம்’ என்று பொருள் வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தன்பெயருக்கு ஏற்றபடி, ‘நிவர்’ இருள்சூழாமல் காத்துக்கொண்டது. தமிழக அரசு தயார்நிலையில் எல்லா முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மீட்புபணிக்காக தமிழக காவல்துறை, தீயணைக்கும் படை, தேசிய பேரிடர் மீட்புபடை, முப்படை போன்ற எல்லாதுறைகளும் தயார்நிலையில் இருந்தன.

கடலோர காவல்படையை சேர்ந்த ‘ஜோதி’, ‘சுமித்ரா’ ஆகிய கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் தயாராக இருந்தன. ஆனால், ‘நிவர்’ புயல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே ஏறத்தாழ 130 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்றுடன் கரையை கடந்து இருக்கிறது.

அந்த புயல் கடந்தபகுதி மட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. பாதிப்புகள் ஏற்பட்டன. ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கின. மீனவர்களின் வாழ்வாதாரம் கடந்த ஒருவாரமாக பாதிக்கப்பட்டது. பெரிய உயிரிழப்புகள் எதுவும்இல்லை. தற்போது அந்த புயல் கரையை கடந்து தமிழ்நாட்டை தாண்டி சென்றுவிட்டது. நேற்றுமுன்தினம் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட சென்றதும் இல்லாமல், நேற்று கடலூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தொடர்ந்து நேற்றுமுன்தினம், நேற்று என்று தண்ணீருக்குள் நடந்துசென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணபொருட்களை வழங்கிய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினும், நேற்று காலையில் இருந்தே முட்டளவுக்குமேல் தண்ணீரில் நடந்துசென்று பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நேரில்சென்று மக்களுக்கு உதவிகள் வழங்கிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், பம்பரமாக சுழன்ற அரசு எந்திரமும், கட்டுப்பாட்டு அறையே கதி என்று இருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் என எல்லோரும் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்.

வழக்கமாக பாதிப்புகளை தமிழகஅரசு அதிகாரிகள் கணக்கிட்டு மத்திய அரசுக்கு உதவிகோர மனு அனுப்பி, அங்கிருந்து மத்தியக்குழு பார்வையிட வருவதற்கு சில பல நாட்கள் ஆகிவிடும். மத்தியக்குழு வரும்நேரத்தில், பாதிப்பின் கோரம் அவ்வளவு தெரியாது. இந்தமுறை சற்றும் தாமதம் இல்லாமல் எத்தனை வீடுகள் சேதம் அடைந்துள்ளன?, எவ்வளவு கால்நடைகள் உயிரிழந்தன?, எவ்வளவு சாலைகள், மின்கம்பங்கள், சாகுபடி பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின? என்பதை எல்லாம் அதிகாரிகள் இன்று தொடங்கி, ஓரிரு நாட்களுக்குள் கணக்கிட்டு, வீடியோ, புகைப்படங்களுடன் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி, பாதிப்பின் சுவடு மறையும் முன்பு மத்தியக்குழுவை வரவழைத்து காட்டவேண்டும்.

இயற்கை பேரிடரை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றாலும், ‘நிவர்’ புயல் சில பாடங்களை தந்துள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரி 5 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டது. சென்னை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறந்துவிடப்பட்டு, வீணாக கடலில் போய் கலந்தது. இதுபோல, பல மாவட்டங்களில் வெள்ளநீர் வீணாகியது. இதுபோன்ற சம்பவங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைப்பதற்கான திட்டங்களை, தமிழக அரசு தீட்டவேண்டும். புயல் ஓய்ந்துவிட்டது. இனி நிவாரண பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும்.

Next Story