கஷ்டமான காலம் நீங்கப்போகிறது!


கஷ்டமான காலம் நீங்கப்போகிறது!
x
தினத்தந்தி 29 Nov 2020 9:30 PM GMT (Updated: 29 Nov 2020 5:33 PM GMT)

புயல் நிவாரணப்பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு சோதனைக்குமேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ‘நிவர்’ புயல் ஆட்டம் முடிந்துவிட்டது. தற்போது, புயல் நிவாரணப்பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு சோதனைக்குமேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஒருபக்கம் இது இருந்தாலும், அடுத்தபக்கம் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை தீட்டவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்துக்கு சற்றுமுன்பு, கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களான அரியானா, டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக்கூட்டத்தில் அவர், ஒரு நம்பிக்கை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளார். “அடுத்த 4 அல்லது 6 வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும். தயாராக இருங்கள்” என்று அறிவித்திருக்கிறார். கொரோனா தடுப்பூசி வருவதற்கு காலதாமதமாகிவிடுமோ? என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பிரதமர் கூறிய தகவல் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

அடுத்து அனைத்து மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் அவர் பேசும்போது, “கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும். கண்காணிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். வட்டார வாரியாக பணி குழுக்களை அமைக்கவேண்டும். இது ஒரு மிகப்பெரிய வேலை. இந்த தடுப்பூசியை ஒருமுறை போடுவதா?, அல்லது இருமுறை அல்லது 3 முறை போடுவதா? என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்காக அந்த ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்டு மக்களுக்கு போடுவதுவரை எல்லா கட்டங்களிலும் ஏற்பாடுகளை செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். “எந்தநேரத்தில், எந்தெந்த வகையில், இந்த தடுப்பூசியை போடுவது என்பதை விஞ்ஞானிகள் முடிவு செய்வார்களேதவிர, அரசியல்வாதிகள் அல்ல” என்பதையும் அவர் கூறியிருக்கிறார். “எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படுவதுதான் நமது முக்கியபணி” என்று தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் ஆமதாபாத், ஐதராபாத், புனேயிலுள்ள 3 நிறுவனங்களில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஏற்கனவே, மத்திய அரசாங்கம், மாநில அரசுகளின் துணையோடு யார்-யாருக்கு முதலில் இந்த தடுப்பூசி மருந்தை போடுவது? என்பதுகுறித்து ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. முதல்கட்டமாக, இந்தியா முழுமைக்கும் ஏறத்தாழ 30 கோடி பேர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் யார்-யாருக்கு முதலில் போடுவது? என்ற பட்டியலையும் தமிழக அரசு உடனடியாக தயாரிக்கவேண்டும். பிரதமர் அதேகூட்டத்தில், “சமாளிக்க முடியாத அளவில் கொரோனா பரவல் அதிகரித்துவிடக்கூடாது” என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார். “100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால், 5 பேருக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும், இறப்புவிகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்ற வகையிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 100 பேருக்கு பரிசோதனை செய்தால், 3 பேருக்குகீழ் வந்துவிட்டது. ஆனால், சென்னையில் மட்டும் 5 சதவீதத்தை சுற்றி இருக்கிறது. அதேபோல இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருக்கிறது. இதில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும். கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிய 5 மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில், ‘நிவர்’ புயல் நிவாரணப்பணிகளில் வேகமாக இருக்கும் தமிழக அரசு, அடுத்த முக்கியப்பணியாக கொரோனா பரவலை தடுப்பதிலும், தடுப்பூசிகளை போடுவதற்கான அட்டவணைகளை தயாரிப்பதிலும் தீவிரகவனம் செலுத்தவேண்டும், மும்முரமாக ஈடுபடவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story