டெல்லியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்


டெல்லியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2020 9:30 PM GMT (Updated: 2020-12-01T00:07:08+05:30)

‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று வழக்கு மொழி உண்டு. இதுதான் இப்போது டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் நடக்கிறது.

‘தன் கஷ்டம் தன்னோடு’ என்று வாழ்ந்து கொண்டிருப்பவன் விவசாயி. ஆனால், இனியும் இந்த வலியை தாங்க முடியாது என்ற நிலை வரும்போது, வீதிக்கு வந்து போராட தொடங்குகிறான். ‘விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வருகிறோம், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக கொண்டு வருகிறோம். விவசாயிகள் லாபம் ஈட்ட கொண்டு வருகிறோம்’ என்று கூறி, கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசாங்கம் நிறைவேற்றியது. பெரும்பாலான விவசாயிகள் இந்த சட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நாடு முழுவதும் விவசாயிகளின் குரல் எதிரொலித்தது. அரசியல் கட்சிகளும், கண்டன அறிக்கைகளை, போராட்டங்களை நடத்தினர். பஞ்சாப், அரியானா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்தது. பஞ்சாப் விவசாயிகள் தண்டவாளத்தில் தலைவைத்து தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசாங்கம் தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற நிபந்தனையுடன், அந்த போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மத்திய அரசாங்கம் அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

இதனால், கடந்த வாரம் ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன், பஞ்சாப், அரியானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஏராளமான டிராக்டர்களிலும், லாரிகளிலும் குவிய தொடங்கிய விவசாயிகள், இந்த ‘3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையில் விளை பொருட்களை வாங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளோடு டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள ஜந்தர்மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களில் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், மத்திய அரசாங்கம் அவர்களை புராரி மைதானத்திற்கு மட்டும் செல்ல அனுமதிக்கிறோம். அங்கு சென்றால், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் நாங்கள் புராரி மைதானத்திற்கு செல்ல மாட்டோம், அது திறந்தவெளி சிறைச்சாலை என்று அறிவித்து 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுந்த ஏற்பாடுகளுடன் தயாராக வந்து இருக்கிறார்கள். ஏராளமான உணவு பொருட்கள், தண்ணீர், போர்வை போன்றவற்றை டிராக்டர்களில் எடுத்து வந்திருக்கிறார்கள். டெல்லியில் இப்போது கடும் குளிர். மேலும் இவ்வளவு கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் இருக்கும்போது, கொரோனா பரவல் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் விவசாயிகள் அதை பற்றி பயப்படவில்லை. கொரோனாவும், வாழ்வா? சாவா? போராட்டம்தான், அது போலத்தான் எங்கள் கோரிக்கைகளின் நியாயமும் வாழ்வா? சாவா? போராட்டம்தான். எனவே இரண்டில், ஒன்று பார்க்காமல் வீடு திரும்ப போவதில்லை என்று கூறுகிறார்கள். அரசும் விட்டுக்கொடுப்பதாக இல்லை, விவசாயிகளும் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த இருக்கிறார்கள். எதிரி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிபந்தனையாகத் தான், ‘நீ படையை வாபஸ் வாங்கு, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்பார்கள். அதே நிலைப்பாட்டை புராரி மைதானத்திற்கு போனால் தான் பேச்சுவார்த்தை என்று மத்திய அரசு நிபந்தனை விதிப்பது ஏற்புடையதல்ல என்பது விவசாயிகள் கருத்து. இந்த நிலையில், ‘ஊடலில் தோற்றவர் வென்றார்’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப மத்திய அரசாங்கம் விட்டுக்கொடுத்து, தங்கள் நிலையில் இருந்து சற்று இறங்கி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்பது தான் தமிழக விவசாயிகளின் எண்ணமாகும்.

Next Story